பட்டாசுகளை ரயிலில் எடுத்து சென்றால் சிறை
பொள்ளாச்சி: எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு பலரும் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் பட்டாசு, மத்தாப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்கின்றனர். இதன் கராணமாக, தீவிபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக்கருத்தில் கொண்டு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி, பட்டாசுகள், மத்தாப்புகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்வதோடு, பயணியர் தண்டிக்கப்படுவர். அத்தகையை பொருட்களை எடுத்துச் சென்றால், பயணியருக்கு ரூ.1,000 அபராதம் மற்றும், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரயில்வே பாதுகாப்பு படையினர் இதுகுறித்து தொடர் சோதனையில் ஈடுபடுவர் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.