உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவர்களுக்கு வாகனம் கொடுக்கும் பெற்றோர் மீது வழக்கு! விபத்து ஏற்பட்டால் மூன்று மாத சிறை

சிறுவர்களுக்கு வாகனம் கொடுக்கும் பெற்றோர் மீது வழக்கு! விபத்து ஏற்பட்டால் மூன்று மாத சிறை

கோவை : சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். கோவை மாநகர பகுதிகளில் சமீப காலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்துவிட்டது. 18 வயது ஆகும் முன்பே அவர்களுக்கு இருசக்கர வாகனங்களை ஓட்ட பெற்றோர் கற்றுக்கொடுக்கின்றனர். 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் வாகனங்களை இயக்கும் போது, வயது கோளாறு காரணமாகவும், ஆர்வத்தின் காரணமாகவும் அதிவேகமாக இயக்கி விபத்துகளையும் ஏற்படுத்துகின்றனர். இதில், காயமடைந்து கை, கால்கள் இழக்கின்றனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து போகின்றனர். அப்படி ஒரு நிகழ்வில், கரும்புக்கடை, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர், மகன் ரிஜாஸ், 17. இவர் தனது நண்பரான ஜெசில், 16 என்பவரை அழைத்துக்கொண்டு உக்கடம் சுங்கம் பைபாஸ் சாலையில், ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்த போது, பின்னால் வந்த அரசு பஸ் ரிஜாஸ் மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார். உடன் சென்ற ஜெசில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் கோவையில் அடிக்கடி நடக்க துவங்கிவிட்டது. மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 199 (ஏ) கீழ் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், சிறுவனின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது வாகன உரிமையாளருக்கு 3 மாத சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது. கோவை மாநகரில் உக்கடம், ஆத்துப்பாலம், பீளமேடு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுவர்கள் பலர் ஹெல்மெட் கூட அணியாமல் இருசக்கர வாகனங்களில் அதிகேவகமாக செல்கின்றனர். கோவை மாநகர பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் 10 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''பல சிறுவர்கள் இரு சக்கர வாகனங்களை இயக்குவதை பார்க்க முடிகிறது. போலீசார் சார்பில் பெற்றோரை அழைத்து, சிறுவர்களுக்கு வாகனங்கள் கொடுக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். சாலைகளில் இருசக்கர வாகனங்களை சிறுவர்கள் ஓட்டி செல்வதை பார்த்தால் போலீசார் அவர்களை நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல சமயங்களில் எச்சரித்து அனுப்புகின்றனர். இதனால் அவர்கள் அச்சமின்றி அடுத்த முறை வாகனங்களை எடுத்துக்கொண்டு பறக்கின்றனர். அவர்களால் ஏற்படும் விபத்தில் அப்பாவி வாகன ஓட்டிகள் பலர் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஏப் 11, 2025 17:02

விபத்தில் சிக்கியவர் செத்தால் தூக்கு ந்னு சட்டம் போடுங்க. அப்பத்தான் திருந்துவாங்க.


Kanakala Subbudu
ஏப் 11, 2025 12:37

18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு பதிவு மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். விபத்து நடந்தால் பெற்றோருக்கு சிறைவாசம் என்பது வந்த பின்னர் எடுக்கும் நடவடிக்கை. வருமுன் காப்பது தான் விவேகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை