விவசாயிகளுக்கு கை கொடுக்கும் ஜாதி முல்லைப்பூ விவசாயம்
மேட்டுப்பாளையம்: உற்பத்தி செலவுகள், குறைவான தண்ணீரில் நன்கு வளரும் என்பதால், காரமடை சுற்றுப்பகுதிகளில் ஜாதி முல்லைப்பூச் செடிகளை, விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்துள்ளனர். மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய பகுதிகளில் குறைவான தண்ணீர் தேவையில், குறுகிய காலத்தில் பலன் தரக்கூடிய, ஜாதி முல்லைப்பூவை விவசாயிகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு, பூ அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். இதில் கிடைக்கும் வருவாய், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது. அதனால் மகளிர் அதிக அளவில் ஜாதி முல்லைப்பூவை விவசாயம் செய்து வருகின்றனர். இது குறித்து காரமடை அடுத்த பணப்பாளையத்தை சேர்ந்த பெண் விவசாயி விமலா கூறியதாவது: ஒரு ஏக்கரில் ஆயிரம் ஜாதி முல்லைப்பூ நாற்றுகளை நடவு செய்யலாம். இது வறட்சி பயிர் என்பதால், 15 லிருந்து, 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாகும். நாற்றுகளை நடவு செய்த ஆறு மாதங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கும். ஆனால் ஓராண்டு வரை பூக்கள் உற்பத்தி அவ்வளவாக இருக்காது. ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பூ சீசன் ஆகும். இதற்கு மிதமான வெயில் இருக்க வேண்டும். அதிக அளவில் மழை பெய்தாலோ அல்லது தண்ணீர் பாய்ச்சினாலோ, செடிகள் பெரிய அளவில் வளர்ந்தால், பூக்கள் குறைவாக கிடைக்கும். அதனால் குறைவான அளவில் பூ செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடிகளில் இருந்து தொடர்ச்சியாக, 7 மாதங்களுக்கு பூக்கள் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். தினமும் ஒரு செடியிலிருந்து, 150 லிருந்து 200 கிராம் பூக்கள் கிடைக்கும். பூக்கள் பறிக்கும் வேலையாட்களுக்கு கிலோவுக்கு, 110 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. சென்ட் கம்பெனிகள் அந்தந்த இடங்களுக்கே வந்து, ஒரு கிலோ பூ, 210 ரூபாய் விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். நூறு பூச்செடிகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு, வாரம் ஐந்தாயிரத்திலிருந்து, 6000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். பூச்சி மருந்து அடித்தல், உரம் வைத்தல் அதிகளவில் தேவைப்படாது. உற்பத்தி செலவுகள் குறைவாக இருப்பதால், வருவாய் ஓரளவு இதில் கிடைப்பதால், மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில், விவசாயிகள் அதிக அளவில் பூச்செடிகளை பயிர் செய்துள்ளனர். டிசம்பர் மாதம் பூக்கள் அறுவடை முடிந்த பின், ஜனவரி மாதம் செடிகளில் உள்ள கிளைகள் அனைத்தையும் வெட்டி விட வேண்டும். அப்போது தான் புதிதாக கிளைகள் வளரும். அதிலிருந்து அதிக பூக்கள் பூக்கத் தொடங்கும். ஒரு முறை பயிர் செய்தால், தொடர்ச்சியாக, 25 ஆண்டுகள் வரை, பூக்கள் அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். இவ்வாறு பெண் விவசாயி கூறினார்.