கால்நடைகள் ரோட்டில் உலா; கட்டுப்படுத்த வலியுறுத்தல்
வால்பாறை; வால்பாறையில், ரோட்டில் கால்நடைகள் சுற்றுவதை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகள் அதிகளவில் ரோட்டில் சுற்றுகின்றன. ரோட்டில் ஏற்கனவே ஆக்கிரிமிப்பு கடைகளாலும், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகளால் விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி விட்டது. மக்கள் கூறுகையில், 'வால்பாறைக்கு சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் நடமாடுவதால் மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். வால்பாறை நகரில் கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றுவதை தடுக்க, தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகள் ரோட்டில் நடமாடினால், அவற்றை பிடித்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும்,' என்றனர்.