உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராமநாமம் சொல்வதால் வரும் ஆபத்து விலகும்

ராமநாமம் சொல்வதால் வரும் ஆபத்து விலகும்

கோவை; கோவை ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்வு நடந்து வருகிறது.'சீதா கல்யாண வைபவம்' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: ராமர், அகலிகைக்கு சாபவிமோச்சனம் கொடுத்தார். அகலிகை அழகு என்ற கர்வத்தாலும், இந்திரன் காமத்தாலும், கவுதமன் கோபத்தாலும் கெட்டனர்.இந்த மூன்று பேரும் சேர்ந்து, ஒரு பெண்ணை கல்லாக்கினார்கள். ராமன் கர்வம், காமம், கோபம் அனைத்தும் அடக்கி, கட்டுப்பாட்டுடன் இருந்தவர்; கல்லை பெண்ணாக்கினார். ராமநாமத்தை பல ஆண்டுகளாக ஜபித்த அகலிகை, அவர் திருவடி பட்டு பெண்ணாகி கணவனை அடைந்தாள். ராமநாமம் சொல்வதால், வரும் ஆபத்துக்கள் விலகும் என்பதற்கு அகலிகை சான்று. ராமன் மிதிலை வந்தார்; சீதையை பார்த்தார், ஜனகமகாராஜா வைத்த வில்லை வளைத்து சீதையை கரம் பிடித்தார். வில்லை வளைப்பது என்பது, மணமகனின் ஆற்றலை பரிசோதிப்பதாகும். இந்த காலத்தில் கல்வித்தகுதியை பார்க்கின்றனர். பெண்னை வளர்ப்பவர்கள் நல்ல முறையில் அனுசரித்து வாழ் என்று தத்துவங்களை சொல்லி வளர்க்க வேண்டும்.ஆண் பிள்ளையை வளர்ப்பவர்கள், பெண்களுக்கு தொல்லை கொடுக்காமல் இணைந்து வாழவேண்டும். இதை இருவரும் உணர்ந்து அனுசரித்து வாழ பழக வேண்டும்.விட்டுக்கொடுக்கும் தன்மை இல்லாததால் தான், பிரிவினை வருகிறது. ஒருவருக்கொருவர் உள்ளத்தோடு ஒன்றி வாழும் தத்துவத்தை, சொல்வது தான் சீதா கல்யாணம். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !