மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
15-Nov-2024
கோவை; சென்னையில் டாக்டரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து கோவையில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் டாக்டர் பாலாஜி மீது நேற்று முன்தினம் கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.இதையடுத்து, பணியில் உள்ள டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்கள்.இதனால், புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் உள்ளிட்டவை நடக்கவில்லை. மேலும், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் பணி புறக்கணிப்பு செய்தனர். அவசர சிகிச்சைப் பிரிவு மட்டும் செயல்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மருத்துவர்கள் பணிக்கு வராததால் செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.கோவை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் கனகராஜ் கூறுகையில், ''புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கவில்லை. அவசர பிரிவு மட்டும் செயல்படுகிறது. இந்த போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள், தனியார் டாக்டர்கள் என அனைவரும் பங்கேற்று உள்ளனர். அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார்.
15-Nov-2024