விபத்தில்லா கோவை விழிப்புணர்வு முதல்வர் தலைமையில் உறுதிமொழி
கோவை:கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 9ம் தேதி (வியாழக்கிழமை) 'விபத்தில்லா கோவை' குறித்து, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சாலை விபத்து இல்லாத கோவையை உருவாக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம், மாநகர போலீசார், உயிர் அமைப்பு சார்பில், 'நான் உயிர் காவலன்' எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரசாரத்தின் முக்கிய அம்சமாக, 10 லட்சம் பேரை சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க வைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது; ஒரு வாரத்துக்கு விபத்தில்லா கோவை எனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வரும், 9ம் தேதி கோவை வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், கோவை அரசு கலை கல்லுாரியில் நடைபெற உள்ள உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அன்றைய தினம், காலை 11.30 மணிக்கு நடக்க உள்ள நிகழ்ச்சியில், 3,000க்கும்அதிகமான மாணவர்கள் உறுதிமொழி ஏற்கின்றனர். மாணவர்கள் தவிர, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் உறுதிமொழி ஏற்கின்றனர். கோவை மாவட்டத்தில், பள்ளிகள், கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள், அரசு துறை அலுவலகங்கள், ரேஷன் கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள, 10 லட்சம் பேர் வரை உறுதிமொழி ஏற்க உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், உயிர் அமைப்பினர் செய்து வருகின்றனர்.