சிட்டி கிரைம்
மதுபோதையில் விழுந்து மரணம்
மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார், 63. இவர் மதுபோதையில் விளாங்குறிச்சி பி.பி.ஜி., கல்லுாரி அருகில், தனது இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலி நிறுவனம் மீது வழக்கு
ராம்நகர், பொன்னையா தெருவில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில், பிரபல நிறுவனத்தின் பெயரில், போலியான கிளட்ச் பிளேட், ஏர் பில்டர், கேபிள் உள்ளிட்டவை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. சென்னையை சேர்ந்த அதிகாரிகள், வாடிக்கையாளர் போல் உதிரிபாகங்கள் வாங்கி பார்த்தபோது, போலி என தெரியவந்தது. காட்டூர் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வியாபாரி மீது தாக்குதல்; இருவர் கைது
சங்கனுார், காமராஜபுரத்தை சேர்ந்தவர் தீனதயாளன், 24. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கவுதம், 30 என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் தீனதயாளன் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த கவுதம் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர், தீனதயாளனிடம் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அவர்கள், தீனதயாளனை கட்டையால் தாக்கினர். காயமடைந்த வாலிபரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட கவுதம் மற்றும் சிவனேஷ்வர், 27 ஆகியோரை கைது செய்தனர். மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
சரவணம்பட்டி சிவசக்தி நகரை சேர்ந்தவர் கதிர்வேல், 40; மனைவி அமுதவேணி, 33. கதிர்வேல் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அடிக்கடி மதுபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன், கதிர்வேல் மது குடித்தது குறித்து, அமுதவேனி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கதிர்வேல் பூரிக்கட்டையால் மனைவியை தாக்கியுள்ளார். காயமடைந்த அமுதவேணி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். லாட்டரி விற்றவர் கைது
மரக்கடை பகுதியில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரி முன் இருந்த முபாரக் அலி, 50 என்பவரை விசாரித்தனர். அப்போது அவர் கேரளா லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த லாட்டரி டிக்கெட்களை பறிமுதல் செய்த போலீசார், முபாரக் அலியை கைது செய்தனர்.