சிட்டி கிரைம்
கஞ்சா விற்றவர்கள் கைது
கோவை, மதுக்கரை அருகே சீரபாளையத்தில், கஞ்சா விற்கப்படுவதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், ஓட்டல் ஒன்றின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தவரை விசாரித்தனர். அவர், ஒடிசாவை சேர்ந்த சித்தாந்த், 20, என்பதும் தற்போது சீரபாளையத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. அவர் விற்பனைக்காக, 1.1 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.* உக்கடம் சுற்றியுள்ள பகுதிகளில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேரூர் பைபாஸ் சாலை, சி.எம்.சி., காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒருவரை பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில், அவர் விருதுநகரை சேர்ந்த சங்கர், 39 என்பதும், கோவையில் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். லாட்டரி விற்றவர்கள் கைது
பீளமேடு போலீசார், ஆவாரம்பாளையம் பகுதியில் ரோந்து சென்ற போது அப்பகுதியில் சட்ட விரோதமாக, லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து விசாரித்த போலீசார் காந்திமாநகர் பகுதியை சேர்ந்த நாராயணசாாமி, 77 மற்றும் திருவேங்கடசாமி வீதியை சேர்ந்த செண்பகவள்ளி, 52 ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் கேரளா சென்று, லாட்டரிச்சீட்டு வாங்கி வந்து, இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பஸ்சில் செயின் பறிப்பு
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி, 33. கோவை -திருச்சி ரோடு, நாடார் வீதியில் தங்கியிருந்து கோவையில் பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி பணி முடிந்து, எஸ்.பி., அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, அரசு பேருந்தில் சென்றார். திருச்சி சாலை ரெயின்போ பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்கு சென்றார். அப்போது, 3 சவரன் தங்க செயின் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். மனைவியை தாக்கியவருக்கு சிறை
கோவை சூலுாரை சேர்ந்தவர் கதிரேசன், 29. இருகூரை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா, 29. இருவருக்கும் கடந்த செப்., மாதம் திருமணமானது. இருவரும் இருகூர் பழனியப்ப தேவர் வீதியில் வசித்து வருகின்றனர். கதிரேசனுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன், மதுபோதையில் வீட்டுக்கு வந்த கதிரேசன், மனைவியிடம் தகாராறு செய்து தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த விஷ்ணுபிரியா, தனது தாயின் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விஷ்ணுபிரியா அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் கதிரேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவில் உண்டியல் திருட்டு
கோவை பெரியகடை வீதியில், அருள்மிகு மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரி கடந்த 9ம் தேதி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை, 7:30 மணிக்கு, கோவிலை திறக்க வந்தார். அப்போது, கதவு உடைக்கப்பட்டு, உண்டியல் திருட்டு போயிருந்தது. அவர் பெரியகடை வீதி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். காப்பர் பிளேட் திருடியவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன், 45. இவர் தடாகம் சாலையில் மிஸ்டர் காப்பர் என்ற நிறுவனம் வைத்துள்ளார். இங்கு கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன், 46 என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த செப்., 28ம் தேதி முதல், 'ஆர்டர்' இல்லாததால் கம்பெனி மூடப்பட்டது. கடந்த 7ம் தேதி மனோகரன் கம்பெனியை திறந்தார். அப்போது, உள்ளே இருந்து 25 கிலோ காப்பர் பிளேட் திருட்டு போயிருந்தது. சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்த போது, கம்பெனியில் பணியாற்றும் சந்திரசேகரன் திருடிச்சென்றதுதெரியவந்தது. புகாரின் போரில் சாய்பாபா காலனி போலீசார், சந்திரசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.