மேலும் செய்திகள்
சிட்டி க்ரைம்
14-Nov-2024
கோவை கள்ளிமடை நடு வீதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி முத்துமணி, 35. இவர் நேற்று முன்தினம் தனது தோழியுடன் சிங்காநல்லுார் குளத்தேரி பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் முத்துமணி அருகே சென்று அவரது கழுத்தில் இருந்த ஒரு பவுன், 6 கிராம் தங்க நகையை பறித்தனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துமணி மற்றும் அவரது தோழி சத்தம் போட்டனர். அவர்களின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர். முத்துமணி புகாரின் பேரில் சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து நகையை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். --சயனைடு குடித்து வாலிபர் தற்கொலை
கோவை செல்வபுரம் அமுல் நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன், 33. இவர் வீட்டில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பாண்டியராஜன் அங்கிருந்த சயனைடை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பாண்டியராஜனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். --படிக்கட்டில் தவறி விழுந்தவர் பலி
கோவை கணபதி புதுார், 3வது வீதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன், 56. இவர் சரவணம்பட்டி கொண்டையம்பாளையத்தில் மெட்டல் கம்பெனி நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி கமலக்கண்ணன் வீட்டு மாடியில் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தடுமாறி படிக்கட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
14-Nov-2024