உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிட்டி கிரைம் செய்திகள்

சிட்டி கிரைம் செய்திகள்

குட்கா விற்ற மூவர் கைது

மாநகரில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வெரைட்டி ஹால் போலீசார் பொன்னையராஜபுரம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் 22.5 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குட்காவை பதுக்கிய தஞ்சாவூரை சேர்ந்த நடராஜ், 42, கோவையை சேர்ந்த துல்டர் சிங், 39 மற்றும் மகேந்திரன், 55 ஆகியோரை கைது செய்தனர்.

நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள மண் ரோட்டில் மூன்று வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தனர். அவர்களிடம் சோதனை செய்த போது, கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உக்கடத்தை சேர்ந்த அபிஷேக், 24, குனியமுத்துாரை சேர்ந்த முகமது அர்சத், 18, தென்காசியை சேர்ந்த ராஜகுரு, 21 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பிரியாணி கடையில் திருடிய கேஷியர்

கோவை, கிராஸ் கட் ரோட்டில் பிரபல பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பிரியாணி கடையில் பெரம்பலுாரை சேர்ந்த பாபு, 41 பார்சல் பிரிவில் கேஷியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த, 7ம் தேதி முதல் 11ம் தேதி வரையிலான வரவு செலவு கணக்கில் ரூ. 40 ஆயிரம் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து, விசாரிக்கும் போது, கேஷியர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, கடை நிர்வாகி ஜாபர் சாதிக், 36 காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு புதிவு செய்து விசாரித்ததில், பாபு பணத்தை எடுத்தது உறுதியானது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி