ரவுடிகளிடம் பிணைய பத்திரம் எழுதி வாங்குது மாநகர போலீஸ்
கோவை: பொதுமக்கள் மற்றும் தங்கள் மீதுள்ள வழக்குகளின் சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட குற்றவாளிகள், ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 158 பேரை, கோவை மாநகர எல்லையில் இருந்து ஆறு மாதங்களுக்கு வெளியேற, போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், மார்ச் மாதம் உத்தரவிட்டார். அவர்கள் மீண்டும் மாநகர பகுதிக்குள் வருகிறார்களா என, போலீசார் கண்காணித்து வந்தனர். ஆறு மாத கெடு முடிந்த ரவுடிகள் பலர், கோவைக்கு திரும்பி வந்துள்ளனர். அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, பிணைய பத்திரம் பெறும் நடவடிக்கையை, மாநகர போலீசார் துவக்கியுள்ளனர். போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில், ''மாநகரில், 24 மணி நேர கண்காணிப்பு தவிர, நுண்ணறிவு போலீசாரும் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவைக்குள் வந்துள்ள பழைய ரவுடிகளிடம், 'குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன்' என, பிணைய பத்திரம் வாங்கப்படுகிறது. பிணைய பத்திரம் வழங்கியவர்கள் மீண்டும் ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக கைது செய்யப்படுவர்,'' என்றார்.