அன்பின் ஆடை திட்டத்தில் துணிக்கடை துவக்கம்
பொள்ளாச்சி,; மக்களுக்கு உதவும் வகையில், 'அன்பின் ஆடை' என்ற திட்டத்தில், இலவச ஆடை வழங்கும் துணிக்கடை, புது பஸ் ஸ்டாண்டு நகராட்சி கட்டடத்தில் துவங்கப்பட்டது. 'ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ்' தன்னார்வ அமைப்பு, நகராட்சியுடன் இணைந்து மக்களுக்கு இலவசமாக ஆடை வழங்கும் கடையை, புது பஸ் ஸ்டாண்ட், நகராட்சி கட்டடத்தில் நேற்று துவக்கியது. 'அன்பின் ஆடை' என்ற திட்டத்தில் அமைக்கப்பட்ட கடையை, சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, நகராட்சி தலைவர் சியாமளா ஆகியோர் மையத்தை துவக்கி வைத்தனர். 'ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ்' நிறுவனர் கணேஷ் கூறியதாவது: பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில் முகாம் அமைத்து, பயன்படுத்தப்பட்ட ஆடைகளை பெற்று வந்து அதை மறுசுழற்சி செய்து, ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது, அவர்களே நேரடியாக வந்து, உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகளை இலவசமாக வாங்கிச் செல்லும் வகையில் கடை துவக்கப்பட்டுள்ளது. இந்த கடை, வாரந்தோறும் செவ்வாய்கிழமை நீங்களாக, பிற நாட்களில், காலை 10:00 முதல் மாலை 7:00 மணி வரை செயல்படும். இலவச ஆடை பெற விரும்புவோர், தங்களின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பதிவு செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு நபர் ஒரு ஆடையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பொது மக்கள் ஆடைகளை புதிதாகவும் வழங்கலாம். வழங்க விரும்பினால், 63747 13775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.