கோவையில் செயல்படத் துவங்கியது தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம்
கோவை; சென்னையில் செயல்பட்டு வந்த, தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம், கோவைக்கு மாற்றப்பட்டு, நேற்று முதல் செயல்படத்தொடங்கியது.தென்னை வளர்ச்சி வாரியம் , கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய மண்டல அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வந்தது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக இருக்கும் சூழலில், விவசாயிகள் எளிதில் அணுகும் வகையில், மண்டல அலுவலகத்தை பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் அமைக்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரி வந்தனர்.இதையடுத்து, மண்டல அலுவலகத்தை சென்னையில் இருந்து கோவைக்கு மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றன.தொடர்ந்து, கோவை, சவுரிபாளையம், ஜி.வி., ரெசிடென்சி பகுதியில் தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் நேற்று முதல், கோவையில் இருந்து தன் செயல்பாடுகளைத் துவங்கியது. கோவை அலுவலகத்தின் முதல் நாள் பணிகளை, வாரிய தலைவர் சுப நாகராஜன் பார்வையிட்டு துவக்கி வைத்தார். அவர் 'தினமலர்' நிருபரிடம் கூறுகையில், “தென்னை வளர்ச்சி வாரியத்தின் வாயிலாக, மத்திய அரசு பல்வேறு திட்டங் களைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சென்னையில் உள்ள மண்டல அலுவலகம், கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் அலுவலகத்தை எளிதில் அணுக முடியும். அரசின் திட்டங்களையும் அறிந்து பயன் பெற இயலும். தென்னை வளர்ச்சி வாரியம் எப்போதும், விவசாயிகளுக்குத் துணை நிற்கும்” என்றார்.மண்டல இயக்குநர் அறவாழி, அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.