வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை வாழ்த்துக்கள்
பொள்ளாச்சி; 'வீடுகளில் உட்புறத்தை அழகுப்படுத்த தென்னை நார் பலகை உற்பத்தி செய்யப்படுகிறது,' என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் தெரிவித்தார். இந்தியாவில், 14 மாநிலங்களில், 23,000 தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 5,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தென்னை நார் பொருட்கள், ஆண்டுக்கு 4,500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 16,000 கோடி உள்நாட்டு வணிகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. அதில், வீடுகளை அலங்கரிக்க தென்னை நார் பலகை குறிப்பிடத்தக்கது. இது குறித்து, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது: நம் நாட்டில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் வரை தென்னை நாரை பயன்படுத்தி சில பொருட்கள் மட்டுமே விவசாயத்துக்காக தயாரிக்கப்பட்டது. தென்னை நார் பொருட்களை பல்வேறு இடங்களில் பயன்படுத்தலாம் என பல்வேறு ஆராய்ச்சிகள் வாயிலாகவும், உபயோகத்தின் வாயிலாகவும் நிருபிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்துறையில் தென்னை நார் பயன்பாட்டுக்கான புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது. தென்னை நாருடன், ரப்பர் கலவை கலந்து, நீடில் பெல்ட் பயன்படுத்தி வெப்பத்தை உயர்த்தி பலகை தயாரிக்கப்படுகிறது. இதன் கனம், 2 மி.மீ. முதல், 3 மி.மீ. வரை இருக்கும். வீட்டின் உட்புற சுவரில் தென்னை நார் பலகையை பொருத்தலாம். அதில் நமக்கு இயற்கை வண்ணங்களை உபயோகப்படுத்துவதன் வாயிலாக எவ்விதமான உடல் தீங்கு ஏற்படாது.இதை பயன்படுத்தும் போது, வீட்டினுள் 'ஏசி' பயன்பாடு மிக குறைவாக இருக்கும். தென்னை நாரை பொறுத்தவரை மிக துல்லியமான வேதியியல், அறிவியல் ஆய்வுகளின் படி பலகைகளை பயன்படுத்தும் போது, ஒலி மற்றும் ஒளியுடைய தரத்தை அதிகப்படுத்துகிறது. தற்போது, 8 அடிக்கு, 4 அடி என்ற அளவில், தென்னை நார் பலகை தயாரித்து, 1,400 - 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விரும்பும் டிசைனில் தென்னை நார் பலகை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
அருமை வாழ்த்துக்கள்