உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அடுத்தடுத்து அடி! மின்கட்டண உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை

தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அடுத்தடுத்து அடி! மின்கட்டண உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி; மூலப்பொருள் விலையேற்றம், தட்டுப்பாடு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், தென்னை நார் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் மின் கட்டண உயர்வால் மேலும் பாதிக்கப்படும் என, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.தென்னை நார் உற்பத்திக்கு இந்தியாவில், 23 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஏழாயிரம் தொழிற்சாலைகளும் உள்ளன.நாட்டில், ஆண்டுதோறும், 9.81 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், தமிழகத்தில் இருந்து மட்டும், ஆறு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியாகிறது. இதில், 90 சதவீதம் சீனாவுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.இங்கு இருந்து, ஏற்றுமதி செய்யப்படும் தென்னை நார் பொருட்களை கொண்டு, சீனாவில், 100க்கும் மேற்பட்ட மரச்சாமான்கள், மரப்பலகை உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து, அவர்கள் ஏற்றுமதி செய்கின்றனர்.இந்நிலையில், தென்னையில் நோய் தாக்குதல், மரங்கள் வெட்டி அகற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இளநீர், தேங்காய் உள்ளிட்டவை பற்றாக்குறையாக உள்ளதால், மட்டைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், உற்பத்தியாளர்களது தலையில் மின்கட்டண உயர்வு சுமை சுமத்தப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:இந்தியாவில், நான்காயிரம் கோடி ரூபாய் தென்னை நார் ஏற்றுமதியில், 1,500 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது கிராமப்புறம் சார்ந்த தொழிலாக உள்ளது.கன்டெய்னர் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப்பொருளான மட்டை விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் ஏற்கனவே, 30 சதவீதம் தென்னை நார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.ஆண்டில், 200 நாட்கள் மட்டுமே தொழில் நடக்கிறது. மழை பெய்தால் தென்னை நார் உலர்த்த முடியாத நிலை உள்ளது.ஒரு கிலோ தென்னை நார் உற்பத்திக்கு, 75 பைசாவில் இருந்து, 1.20 ரூபாய் வரை மின் கட்டண செலவு ஏற்பட்டது. கடந்த முறை மின் கட்டணம் உயர்த்திய போது, கிலோ உற்பத்திக்கு, 1.80 ரூபாயில் இருந்து, 2.40 ரூபாய் செலவானது. தற்போது, மின் கட்டண உயர்வால், ஒரு கிலோ தென்னை நார் உற்பத்திக்கு, 2.80 ரூபாயில் இருந்து, மூன்று ரூபாய் வரை செலவாகும்.கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், தினமும் 40 ஆயிரம் மட்டை வீதமாக, 24 நாட்களுக்கு நார் உற்பத்தி செய்ய, 1.20 லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.கடந்த முறை மின்கட்டணம் உயர்த்திய போது, 2.10 லட்சம் ரூபாயாக மின்கட்டணம் உயர்ந்தது.தற்போதைய, மின்கட்டண உயர்வால், 2.60 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மின் கட்டண உயர்வால், 20 சதவீதம் நிறுவனங்கள் மூட வாய்ப்புள்ளது.சிறு, குறு நிறுவனங்களின் ஜி.எஸ்.டி.,யால், அரசுக்கு வருமானம் கிடைக்கும். இதுபோன்று நிறுவனங்கள் மூடப்பட்டால், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். எனவே, அரசு கவனம் செலுத்தி, மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தி, தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி