கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் முப்பெரும் விழா
கோவை; கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில், பொறியாளர் தினத்தை முன்னிட்டு, பொறியாளர் தினம் மற்றும் விருது வழங்கும் விழா, கட்டட தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா, மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா என, முப்பெரும் விழா நடந்தது. தலைவர் முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார். உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பொறியாளர்களுக்கென பிரத்யேக பாடல் வெளியிடப்பட்டது. மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நோட்டீசை, கட்டடக்கலை நிபுணர் ரமணி சங்கர் மற்றும் உதவி கமிஷனர் அஜய்தங்கம் ஆகியோர் வெளியிட்டனர். சங்கர் அசோசியேட்ஸ் தலைமை கட்டடக்கலை நிபுணர் ரமணி சங்கருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டது. இவ்விழாவில், கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் செயலாளர் லாரன்ஸ், பொருளாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். 'குழந்தைகளுக்கு முடிவு எடுக்க கற்றுத்தர வேண்டும்' விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, உதவி கமிஷனர் அஜய்தங்கம் பேசுகையில், நாம் எப்போதும், நம் குழந்தைகளின் வாழ்வில், பல முக்கிய முடிவுகளை எடுக்கிறோம். குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க வேண்டும். முடிவுகளை எடுக்க கற்றுக்கொடுக்க வேண்டும். அதன்பின், அவர்களை அதை சரியாக செய்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும், என்றார்.