பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர்வு; மாநில அளவில் கோவை மாவட்டம் 6வது இடம்
கோவை : நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கோவை மாவட்டம் மாநில அளவில் 6வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, 94.01 சதவீத தேர்ச்சி பெற்ற நிலையில், இவ்வாண்டு 96.47 சதவீத தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.கோவை வருவாய் மாவட்டத்தில் மொத்தம், 37,237 மாணவர்கள் தேர்வு எழுதினர். 35,873 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்; 1,364 மாணவர்கள் தோல்வியடைந்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 8,749 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 8,356 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்(95.51 சதவீதம்).கோவை கல்வி மாவட்டத்தில், 29,852 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 28,881 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 98.20 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 95.24 சதவீதம்.கோவை மாவட்டத்தில், 13 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 16 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், அரசூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விஸ்வநாதன் மற்றும் வர்ஷா இருவரும், 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று, கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில், முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.இரண்டாவது இடத்தில், ஆலந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி (492 மதிப்பெண்கள்),மூன்றாவது இடத்தில் 491 மதிப்பெண்களுடன் சரவணம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் சுண்டக்காமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை இடம் பெற்றுள்ளன. கணிதத்தில் அதிக தோல்வி
கோவை மாவட்ட அரசு பள்ளிகளில், கணிதப்பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். மொத்தம் 315 மாணவர்கள், 124 மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. தமிழ் பாடத்தில் - 98 மாணவர்களும்;ஆங்கில பாடத்தில் - 8 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் -141 மாணவர்கள்; சமூக அறிவியல் பாடத்தில் 112 மற்றும் கணிதப் பாடத்தில் - 225 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி
கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மொத்தம், 539 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 526 பேர் தேர்ச்சி பெற்று, 97.59 சதவீத தேர்ச்சி விகிதம் பதிவு செய்துள்ளனர். இதில், 9 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் என மொத்தம், 13 பேர் தேர்ச்சியடையவில்லை. 'தொடர் பயிற்சி வகுப்புகள்'
மாவட்ட இடைநிலை கல்வி அதிகாரி கோமதி கூறுகையில், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-2025 கல்வியாண்டு தொடக்கம் முதலே, தலைமை ஆசிரியர்களிடம், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. தொடர் வகுப்புகள் நடத்தப்பட்டன. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில், சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவித்தோம். இதனால் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது,” என்றார்.
தேர்ச்சி சதவீத பட்டியல்
ஆதிதிராவிடர் நல பள்ளிகள் - - 98.57மாநகராட்சி பள்ளிகள் - - 95.28அரசு முழு நிதி உதவி பெறும் பள்ளிகள் -- 94.50நகராட்சி பள்ளிகள் - - 90.53பகுதி நிதி உதவி பெறும் பள்ளிகள் - - 97.34அரசு பள்ளிகள் - - 93.70சுயநிதி பள்ளிகள் - - 98.75பழங்குடி நல பள்ளிகள் - - 100