நீதிபதி பதவி வகிக்க அனுபவம் முக்கியம் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கோவை வக்கீல்கள் வரவேற்பு
கோவை, ; நீதிபதிகள் பணிக்கு தேர்வு எழுத விரும்புவோர், குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் வக்கீலாக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்றும், இப்புதிய நடைமுறை, இனிமேல் நடைபெறும் தேர்வுக்கு பொருந்தும் என்றும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை, கோவை வக்கீல் சங்கத்தினர் வரவேற்றுள்ளனர்.ஆர்.பாலகிருஷ்ணன் (கோவை வக்கீல் சங்க தலைவர்): சட்டபடிப்பு முடித்தவுடன் தேர்வு எழுதி நீதிபதி பணிக்கு வந்தவர்களுக்கு, சட்டம் தொடர்பாகவும், வழக்கு விசாரணையை கையாளவும் போதிய அனுபவம் இருப்பதில்லை. இதனால் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மூன்றாண்டு வக்கீலாக பணியாற்றி அனுபவம் இருக்க வேண்டும் என்பதை, ஐந்தாண்டுகளாக கூட அதிகரிக்கலாம்.பி.நந்தகுமார் (வக்கீல் சங்க கூட்டுக்குழு (ஜாக்) தலைவர்): சட்டம் படித்து முடித்தவுடன், நீதிபதி பணிக்கு தேர்வு எழுதும் நடைமுறைக்கு எதிராக, 2002 முதல் தொடர்ந்து போராடி வருகிறோம். என்ன தான் பயிற்சி கொடுத்தாலும், அனுபவம் இருந்தால் தான் நீதிமன்ற விசாரணை முறை மற்றும் சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடியும். அனுபவம் இல்லாதவர்களை நீதிபதியாக நியமிக்கும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, பல்வேறு மாநிலங்களில் பிரச்னை ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.ஆர்.அருணாசலம் (பார் கவுன்சில் துணை தலைவர்): ஐந்தாண்டு வக்கீல் அனுபவம் இருப்பவர்கள் தான் நீதிபதியாக முடியும் என்ற நடைமுறை, ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்துவது போல, சட்டம் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றாலும், பயிற்சி கொடுக்கலாம் என்று அந்த பழைய நடைமுறையை மாற்றி விட்டனர். அவர்களுக்கு கோர்ட் விசாரணை நடைமுறை தெரிவதில்லை. இதை கருத்தில் கொண்டு, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள இந்த தீர்ப்பு நல்ல விசயம். பி.ஆர்.அருள்மொழி (வக்கீல் சங்க முன்னாள் தலைவர்): வக்கீலாக கோர்ட்டில் ஆஜரான அனுபவம் இல்லாமல், நீதிபதி பணிக்கு வருபவர்களுக்கு, சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு விசாரணை நடைமுறை தெரிவதில்லை. கிரிமினல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அதே நேரத்தில், சிவில் வழக்குகளில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் ஆஜராக தேவையில்லை. வக்கீல் ஆஜரானால் போதுமானது. 'ஏட்டு சுரக்காய், கறிக்கு உதவாது' என்பார்கள். அதே போல, வக்கீலாக கோார்ட்டில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் நீதிபதியாக வந்தால், வழக்கு விசாரணையை திறமையாக நடத்த முடியும்.வக்கீல் ஆர்.சண்முகம்: சட்டம் படித்து, 21 வயதில் ஒருவர் தேர்வு எழுதி நீதிபதி பொறுப்புக்கு வருவோருக்கு விசாரணை நடைமுறை குறித்து அனுபவம் இருக்காது. வழக்கில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல், ஆர்டர் போட காலதாமதம் செய்கின்றனர். சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு விசாரணையிலுள்ள வேறுபாடுகள் கூட, அவர்களுக்கு தெரிவதில்லை. சந்தேகம் இருந்தால், வாய்தா மேல் வாய்தா போட்டு இழுத்தடிக்கின்றனர். இதனால் பல நீதிமன்றங்களில் வழக்கு தேக்கம் அடைகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக தீர்ப்பு வந்துள்ளது.