உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லண்டன் கோல்ப் போட்டியில் கோவை மாணவி அபாரம்

லண்டன் கோல்ப் போட்டியில் கோவை மாணவி அபாரம்

கோவை; லண்டனில் நடந்த, 'பிரிட்டிஷ் ஜூனியர் கோல்ப் வீரர்கள் சாம்பியன்ஷிப்' போட்டியில், கோவையை சேர்ந்த ஆறு வயது மாணவி இரண்டாமிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார். கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த சம்யுக்தா, 6, ஒலம்பஸ் அருகே தனியார் பள்ளியில் 'கிரேடு-1' படிக்கிறார். இவரது தாத்தா, தந்தை, பெரியப்பா என, நான்காம் தலைமுறையாக நான்கு வயது முதலே, கோல்ப் விளையாட்டில் இவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். செட்டிபாளையம் கோல்ப் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ளும் இவர், 2023ம் ஆண்டு தனது நான்கு வயதில், கொடைக்கானல் கோல்ப் மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிவு போட்டியில் 'லாங்கஸ்ட் டிரைவ்' கோப்பையை வென்று, சாம்பியன் புள்ளிகளை துவங்கினார். 2024ல் (ஐந்து வயது) கே.ஜி.சி.,யில், கலப்பு இரட்டையர் போட்டியில் இரண்டாம் இடம், மீண்டும் 'லாங்கஸ்ட் டிரைவ்' கோப்பை சாம்பியன்ஷிப் என இதுவரை, 15க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றுள்ளார். கடந்த, 14ம் தேதி, இங்கிலாந்து நாடு, லண்டனில் உள்ள ஆப்பிரிட்ஜ் கோல்ப் கிளப்பில் நடந்த 'பிரிட்டிஷ் ஜூனியர் கோல்ப் வீரர்கள் சாம்பியன்ஷிப்' கோல்ப் போட்டியில், மாணவி சம்யுக்தா இரண்டாமிடம் பிடித்து, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். சம்யுக்தாவின் தாய் ஐஸ்வர்யா கூறியதாவது: சம்யுக்தா தந்தை விக்னேஷ் கோல்ப் வீரர். பயிற்சிக்கு செல்லும்போது சம்யுக்தாவும் நான்கு வயதில் இருந்தே உடன் செல்ல துவங்கினார். தந்தையின் விளையாட்டை பார்த்து, அவருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. துவக்கத்தில் எவ்வித பயிற்சியும் இல்லாமல், தனித்துவமான முறையில் விளையாடி பரிசு வென்றார். ஐந்து வயதில் இருந்தே முறையான பயிற்சி மேற்கொள்கிறார். லண்டனில் நடந்த போட்டியில் இரண்டாம் பரிசு வென்றுள்ளார். தேசிய, சர்வதேச போட்டிகளில் கால்பதித்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பதே, சம்யுக்தாவின் எதிர்கால இலக்கு. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ