அரிசி மூட்டை வாங்கி மோசடி; கோவை வாலிபர் கைது
கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அருகே டிபார்ட்மென்ட் ஸ்டோரில், 450 அரிசி மூட்டைகள் வாங்கி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கருமத்தம்பட்டி அடுத்த சோளக்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் அன்பரசன், 60. அதே பகுதியில், 20 ஆண்டுகளாக டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த கோபி,45 என்பவர், அன்பரசனை அணுகி, தான் மருத்துவமனைகள், கல்லூரிகளில் உள்ள உணவு விடுதிகளுக்கு அரிசி மூட்டைகள் சப்ளை செய்து வருவதாக கூறி அறிமுகமாகி உள்ளார். அரிசி மூட்டைகளை சாம்பிளாக வழங்கினால், ஆயிரக்கணக்கான் அரிசி மூட்டைகள் ஆர்டர் தருவதாக கூறியுள்ளார். அதை நம்பிய அன்பரசன் அரிசி மூட்டைகளை தர சம்மதித்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 450 அரிசி மூட்டைகளை வாங்கிய கோபி, ஆர்டர் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். போனில் பேசுவதையும் தவிர்த்து வந்ததால், சந்தேகமடைந்து, கோபி குறித்து பல இடங்களில் விசாரித்தபோது, பல இடங்களில் பொருட்கள் வாங்கி மோசடி செய்தது தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்பரசன், கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபியை கைது செய்தனர்.