உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதரவற்ற பெண்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

ஆதரவற்ற பெண்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கோவை: சமூகநலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் உரிமைத் துறை சார்பில் சுயஉதவிக்குழு பிரதிநிதிகள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கினை கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்து பேசியதாவது:தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களைந்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு,சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.வாரியத்திற்கென கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் போன்றோரிடம் உறுப்பினர் சேர்க்கைக்கான வலை பயன்பாடு (வெப் அப்ளிகேசன்) தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்பட்டு, விளையாட்டுத்துறை அமைச்சரால் மக்கள் பயன்பாட்டிற்காக துவங்கி வைக்கப்பட்டது.அதில் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம்பெண்கள் ஆகியோர் உதவிகளை அரசிடமிருந்து பெற, மேற்படி இணையதளம் மூலம் நேரடியாக இ--சேவை மையங்களில் விபரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம்.இவ்வாறு கலெக்டர் கிராந்திகுமார் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் லதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, மாவட்ட தொழில் மைய வணிக வசதி அலுவலர் சாந்த ஷீலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் ஜெயலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி