மாற்றுத்திறனாளி மகனை சுமந்து வந்து வீடு கேட்ட தாய்க்கு கலெக்டர் அனுமதி
கோவை: பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது; கலெக்டர் பவன்குமார், மனுக்களை பெற்றார். n விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்த மனுவில், 'நரசீபுரம் அருகே வெள்ளிமலைப்பட்டினத்துக்குள் புகுந்த காட்டு யானை விவசாய பயிரை சேதப்படுத்தி, முதியவரை தாக்கியது. இதில், அவரது கால்கள் பலத்த காயமடைந்தன. அவருக்கான மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும். தொண்டாமுத்துாரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து, வேறு பகுதிக்கு இடம் மாற்ற வேண்டும்' என, கூறியுள்ளார். n சூலுார் தென்னம்பாளையம் அண்ணா ஆட்டோ தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் அளித்த மனுவில், 'தென்னம்பாளையத்தில் மினி பஸ் ஒன்று அரசு நிர்ணயித்த வழித்தடத்தில் இயங்காமல், வேறு வழித்தடத்தில் இயங்குகிறது. ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. உரிய வழித்தடத்தில் மினி பஸ் இயக்க வேண்டும்' என கூறியுள்ளனர். n மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்டோர், 'ஈ.வெ.ரா. அண்ணாதுரை, அம்பேத்கர் போட்டோக்களை, கலெக்டர் அலுவலகத்தில் மாட்ட வேண்டும்' என்ற கோரிக்கையுடன், போட்டோக்களோடு நுழைந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தி, கோரிக்கை மனு அளிக்க கூறினர். n பொள்ளாச்சி ஆச்சிபட்டி சபீனா, 45 தனது மாற்றுத்திறனாளி மகனை தோளில் சுமந்து வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'எனக்கு இரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஒருவர் மாற்றுத்திறனாளி; மற்ற இருவரும் பள்ளி செல்கின்றனர். எனது கணவருக்கு ஒர்க் ஷாப்பில் கழுத்தில் பிளேடு வெட்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்னால் பணிக்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. போதிய வருவாய் இல்லாததால் எங்களுக்கென்று வீடு இல்லை. குடியிருப்பு கேட்டு, 12 ஆண்டாக நடையாய் நடக்கிறோம். எங்களது நிலையை கருத்தில் கொண்டு வீட்டு மனை ஒதுக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இவரது மனுவை பரிசீலித்த கலெக்டர், குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு ஒதுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். n பத்து ரூபாய் இயக்கம் சார்பில், அதன் நிர்வாகிகள் அளித்த மனுவில், 'அரசின் பல்வேறு துறைகளில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால், பதிலளிக்காமல், மனுக்களை கிடப்பில் போடுகின்றனர். சில நேரங்களில் அதற்கான கட்டணம் செலுத்தினாலும் பதில் தருவது இல்லை' என கூறியுள்ளனர்.