பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய கலெக்டர்
ஆனைமலை: நெல்லித்துறை மன்னத்தில் நவமலை பழங்குடியின மக்களுக்கு வீடு கட்டப்பட உள்ளது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் நவமலை மக்களிடம் கருத்துக்கள், பிரச்னைகளை கேட்டறிந்தார். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலை பழங்குடியின குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு, ஓலைக்குடிசையில், 35 பழங்குடியின குடும்பங்கள் பல தலைமுறையாய் வசித்து வருகின்றனர். வனத்தில் வாழ்வாதாரம் கிடைக்காத நிலையில், பிழைப்பை தேடி நகரத்துக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனைமலை, பொள்ளாச்சி என பல இடங்களுக்கு வேலைக்கு சென்று வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.பிழைப்புக்காக வெளியூர் சென்றாலும், இரவு சொந்த இடத்துக்கு வந்து விடுகின்றனர். இந்நிலையில், நவமலையில் வாழும் மக்களுக்கு நெல்லித்துறை மன்னம் பகுதியில் வீடு கட்டித்தர இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்தில் அவர்களுக்கு வீடு கட்டித்தர மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சப் - கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது மாவட்ட கலெக்டர், 'நவமலை பகுதியில் வாழும் மக்களிடம் அடிப்படை தேவைகள், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை முறையாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார். மேலும், நெல்லித்துறை மன்னம் பகுதியில் வீடுகள் கட்டித்தரப்படும். அங்கு செல்ல விருப்பம் உள்ளதா என, பழங்குடியின மக்களிடம் கலெக்டர் கேட்டார்.அதற்கு, அங்கு செல்ல பஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் பயனாக இருக்கும், என கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர், ''நெல்லித்துறை மன்னம் பகுதியில், பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா, ஐந்து லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் போக்குவரத்து, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தருவதுடன் வீடு கட்டித்தரப்படும்,'' என்றார்.
ஊர விட்டு போக மனமில்ல!
பழங்குடியின மக்கள் கூறுகையில், 'எங்க முன்னோர்களும், நாங்களும் பிறந்து வளர்ந்த இடம் இது தானுங்க. இந்த ஊர விட்டு போக மனமில்லீங்க. வேலைக்கு வெளியூருக்கு தான் போகறோம். காலையில, 8:00 மணிக்கு போனா, ராத்திரி 8:00 மணிக்கு தான் வருவோம். யானை தொல்லை அதிகமாயிருச்சு. குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்க வேண்டியதுள்ளது. நெல்லித்துறை மன்னம் பகுதியில் வீடு கட்டித்தருவதாக சொல்றீங்க. பஸ், மருத்துவ வசதியும் ஏற்படுத்தி கொடுக்க கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்,' என்றனர்.