கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம்: அடையாள அணிவகுப்பு நடத்த மனு
கோவை: கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கோவையில் கடந்த, 2ம் தேதி இரவு விமான நிலையத்தின் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி, மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தமிழகத்தையே இச்சம்பவம் உலுக்கியது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20 ஆகிய மூவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். மூவருக்கும், கோவை அரசு மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவியும், ஆண் நண்பரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளிகளுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த, போலீசார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அடையாள அணிவகுப்பு முடிந்த பின், மூவரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.