உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மே, 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்கணும்! கூட்டத்தில் கமிஷனர் அறிவுரை

மே, 15க்குள் தமிழில் பெயர் பலகை வைக்கணும்! கூட்டத்தில் கமிஷனர் அறிவுரை

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி நகராட்சியில் அரசு உத்தரவுப்படி மே 15க்குள், அனைத்து வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் பள்ளிகளில், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்,' என, ஆலோசனை கூட்டத்தில் கமிஷனர் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் கடைகள், நிறுவனங்கள், ேஹாட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் தமிழ் பெயர் பலகை வைப்பது தொடர்பாக, மாவட்ட அளவிலான குழு அமைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, நகராட்சி எல்லைக்குள் உள்ள கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள், தனியார் பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் பெயர் பலகை வைப்பது தொடர்பாக அனைத்து வியாபார சங்கத்தினர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தொழில் வர்த்தக சபை உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார்.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:அரசு உத்தரவுப்படி, தமிழில் பெயர் பலகையை மே, 15ம் தேதிக்குள் வைக்க வேண்டும்.தமிழில் தமிழ் பெரிய எழுத்திலும், ஆங்கிலம் சிறிய எழுத்திலும் பெயர் பலகைகள் கொண்ட நிறுவனங்கள் அவ்வாறே தொடரலாம்.தமிழில் சிறு எழுத்துக்கள், ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களுடன் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை கொண்ட நிறுவனங்கள் மே, 15ம் தேதிக்குள் பெயர் பலகையை அரசு அறிவித்துள்ளவாறு, மாற்றிட வேண்டும்.மூன்று மொழிகளில் பெயர் பலகை வைக்கும் போது தமிழ், ஆங்கிலம், பிற மொழி எழுத்துக்கள், 5:4:3 என்ற வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியான முறையில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். இல்லாவிட்டால், விளக்கம் கேட்டு அறிவிப்பு வழங்கப்படும்.

பிளாஸ்டிக் தவிர்க்கணும்!

பொள்ளாச்சி நகரில், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தபாடில்லை. கழிவுநீர் செல்லும் வழித்தடங்கள், மழைநீர் செல்லும் ஓடைகளில் பிளாஸ்டிக் அடைத்துக்கொள்கின்றன. மழைக்காலங்களில் மழைநீர், கழிவுநீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.ஒவ்வொரு முறையும் ஓடைகள், கால்வாய்களை துார்வாரும் போது, பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு அகற்றப்படுகின்றன. எனவே, அவற்றை கட்டுப்படுத்த கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அவசியமாகும். கடைகள் முன், பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, பேசினார்.

நடவடிக்கை வேண்டாமே!

பொள்ளாச்சி சிறுவியாபாரிகள் சங்க செயலாளர் ஹரிகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசு கூறியது போன்று, தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்கும் போது மற்ற மொழிகளின் எழுத்துக்கள் மறையக்கூடாது. ஏனெனில் மற்ற மாநிலங்கள் செல்லும் போது அவர்களது தாய் மொழியில் மட்டும் எழுதி இருந்தால் மொழி தெரியாமல் திணறுகிறோம்.தமிழ் முதன்மையானதாக இருக்க வேண்டும்; மற்ற மொழிகளை ஒதுக்கக்கூடாது. தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் வியாபார நிறுவனங்கள் மீது பெரிய நடவடிக்கைகள் எடுக்க கூடாது, என தெரிவித்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை