கூடுதல் கட்டணத்தை தாமதமாக வழங்கியதால் இழப்பீட்டுக்கு உத்தரவு
கோவை; எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜருக்கு பெற்ற கூடுதல் கட்டணத்தை, திருப்பிக் கொடுக்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. கோவை, வேலாண்டிபாளையம், மருதகோனார் வீதியை சேர்ந்த பவித்ரா, கோவை, அன்னுார் ரோட்டிலுள்ள ஷோரூமில், 2022, ஜூன் 14ல், ஓலா மின்சார ஸ்கூட்டர் வாங்கினார். வாகன சார்ஜர் கட்டணமாக, 15,000 ரூபாய் கூடுதலாக பெற்றனர். நான்கு மாதத்தில் கூடுதல் கட்டணத்தை திருப்பித் தருவதாக, விற்பனை நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். பல மாதங்களாகியும் திருப்பித்தராமல், காலதாமதம் செய்தனர். சட்ட அறிவிப்பு கொடுத்தும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, 2024, பிப்ரவரியில் கூடுதல் தொகையை திரும்ப கொடுத்தனர். காலதாமதமாக கொடுத்ததால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பவித்ரா வழக்கு தாக்கல் செய்தார். கட்டணத்தை திருப்பி கொடுத்து விட்டதால், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, எதிர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ' எதிர்மனுதாரர் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.