முன்னாள் மாணவர் சங்க கோப்பைக்கான போட்டிகள்
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்க கோப்பைக்கான, 2வது வார ஹாக்கி மற்றும் த்ரோபால் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் உடற்கல்வியியல் துறை சார்பில், 7ம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்க கோப்பைக்கான போட்டிகள், கல்லூரி வளாகத்தில் இரண்டாவது வாரமாக நடந்தன.போட்டியில், மாநில அளவில் இருந்து பல்வேறு இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆண்களுக்கான ஹாக்கி மற்றும் பெண்களுக்கான எறிபந்து போட்டிகள் நடந்தன. போட்டிகளை, முன்னாள் மாணவர் கார்த்திக் மற்றும் கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில், 13 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடந்தன.இறுதி சுற்றுக்கு, எட்டு அணிகள் தகுதி பெற்றன. பின்பு நடந்த நாக் அவுட் போட்டியில், நான்கு அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.முதல் அரை இறுதி போட்டியில் பார்க் இன்ஜினியரிங் கல்லூரி அணி, பி.எஸ்.ஜி., டெக் அணியை,1:0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.இரண்டாவது அரை இறுதி போட்டியில், குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி, பெனால்டி முறையில், 4:2 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ சக்தி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அணியை வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.பெண்களுக்கான எறிபந்து போட்டியில், நான்கு அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடந்தது. இறுதி போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி, காரமடை ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரி அணியை வென்று, முதல் இடத்தை பிடித்தது.போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் நித்தியானந்தன் மற்றும் உமாராணி ஆகியோர் செய்து இருந்தனர்.