தாமதமாகும் சான்றிதழ்கள்; கலெக்டருக்கு புகார் மனு
வால்பாறை; உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்காமல் வருவாய்த்துறையினர் இழுத்தடிப்பதாக, சி.ஐ.டி.யு., சார்பில், கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.வால்பாறை தாலுகா சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி கற்க வால்பாறை நகரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளது.ஆனால், சான்றிதழ்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதோடு, மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லுாரிகளில் சேர முடியாத நிலை உள்ளது.பள்ளி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சான்றிதழ்கள் வழங்காமல், வருவாய்த்துறை அதிகாரிகள் காலதாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.எனவே, வால்பாறை தாலுகா அலுவலகத்தில், அரசின் பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வகையில், பொதுமக்கள் கேட்கும் சான்றிதழ்களை காலதாமதமின்றி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.