கோவை : தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், முறைகேடு செய்திருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, குடியரசு தின விழாவில் சிறந்த அலுவலர்களுக்கு வழங்கும் நற்சான்று பட்டியலில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் பெயர் நீக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வருவாய்த்துறை சார்பில், வரும், 26ம் தேதி வ.உ.சி., மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. கலெக்டர் கிராந்திகுமார், தேசியக்கொடி ஏற்றுகிறார். காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றதும், மாவட்ட அளவில் அரசு துறைகளில் திறம்பட பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்க உள்ளார்.இதற்காக, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் சிறந்த பணியாளர்கள் விபரம் கோரப்பட்டது. ஊரக வளர்ச்சி துறையில் இருந்து, 10 அதிகாரிகள் பட்டியல் வழங்கப்பட்டது.அதில், கமிட்டிகள் ஆய்வுக்கு வந்தபோது சிறப்பான ஏற்பாடுகள் செய்ததற்காக, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை கவனிக்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் பெயரும் இடம் பெற்றது. இதற்கு, ராமபட்டினம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுதொடர்பாக, பா.ஜ., மாவட்ட பிரசார அணி தலைவர் செந்தில்குமார், கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து, 'ராமபட்டினம் ஊராட்சியில், வேலை உறுதி திட்டத்தில் நடந்த முறைகேடுகளுக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையாக இருந்துள்ளார். விசாரணை அதிகாரி கள ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலருக்கு, குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறந்த அலுவலர் சான்றிதழ் வழங்கினால், முறைகேட்டுக்கு துணை போவதாக அமையும்' என கூறினார்.இதைத்தொடர்ந்து, குடியரசு தின விழாவில் நற்சான்றிதழ் பெறும் சிறந்த அலுவலர்கள் பட்டியலில் இருந்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் பெயர் நீக்கப்பட்டுள்ளது.