மேலும் செய்திகள்
குளுகுளு சீசன் துவக்கம் சுற்றுலா பயணியர் குஷி
13-Sep-2025
பொள்ளாச்சி; தொடர் விடுமுறை காரணமாக, ஆழியாறு, வால்பாறைக்கு செல்ல சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டினர். இதனால், ஆழியாறு சோதனைச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, ஆழியாறு அணை, பூங்கா, கவியருவியை காண, உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் அதிகளவு வருகின்றனர். இந்நிலையில், சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி என அரசு விடுமுறை மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆழியாறு அணைப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் குடும்பத்துடன் வந்தனர். அணை அழகை ரசித்த பின், கவியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.இதனால், ஆழியாறு அணைப்பகுதியில் கூட்டம் களைகட்டியது. வனத்துறை அறிவுரை வால்பாறை செல்லும் வாகனங்கள், ஆழியாறு சோதனைச்சாவடியில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.மேலும், வாகனங்களில் செல்வோரிடம், பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் உள்ளதா என ஆய்வு செய்து, அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்த கூடாது, விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தினர். வால்பாறை வால்பாறையில் பருவமழைக்கு பின் வெயிலுடன் கூடிய சாரல்மழை பெய்யும் நிலையில், குளுகுளு சீசன் நிலவுகிறது.தொடர் விடுமுறையால், வால்பாறையின் இயற்கை அழகை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். வால்பாறையில், சுற்றுலா பயணியர் சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள 'வியூ பாயின்ட்', சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார் அருவி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் ஆகிய இடங்களுக்கு சென்றனர். குறிப்பாக, சிறுகுன்றா கூழாங்கல்ஆறு, சின்னக்கல்லாறு அருவியில் சுற்றுலா பயணியர் அதிகளவில் திரண்டனர். இதனால், தங்கும்விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய போதிய இடவசதி இல்லாத நிலையில், வால்பாறை நகரில்போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. வனத்துறையினர் கூறியதாவது: வால்பாறையை சுற்றி பார்க்க வந்துள்ள சுற்றுலா பயணியர் ரோட்டில் நடமாடும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. குறிப்பாக, சிங்கவால் குரங்குகளுக்கு உணவு வழங்கக்கூடாது. எஸ்டேட் பகுதியில் தேயிலை காட்டில் உலா வரும் யானைகளின் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. குறிப்பாக, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்தப்பகுதியில் 'ட்ரோன்' கேமரா வாயிலாக படம் பிடிக்கக்கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கூறினர்.
13-Sep-2025