மேலும் செய்திகள்
இருளில் சிவகங்கை: தவிக்கும் மக்கள்
05-Oct-2025
கோவை: தெரு விளக்குகள், வார்டு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றின் மின்சார கட்டண செலவை ஆண்டுக்கு 4 கோடி குறைப்பதற்கான சிக்கன நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி தொடங்கி இருக்கிறது. நகரில் 70 ஆயிரம் தெரு விளக்குகள் உள்ளன. 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 145 மாநகராட்சி பள்ளிகள், 5 மண்டல அலுவலகங்கள், ஆழ்குழாய் கிணறுகள், நீரேற்று நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை கோவை மாநகராட்சி பராமரிக்கிறது. இதற்காக மாதம் தோறும் லட்சக்கணக்கில் மின் கட்டணம் செலுத்துகிறது. பகலிலும் எரியும் தெரு விளக்குகள், மாநகராட்சி கட்டடங்களில் தேவையே இல்லாத இடங்களிலும் நேரங்களிலும் மின்விசிறிகள் இயங்குவது, விளக்குகள் எரிவது போன்றவை மின்சார கட்டணம் அதிகரிக்க முக்கியமான காரணம் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு தேவைக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சிக்கு திடீரென விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு இருந்தும் தெரு விளக்குகள் எரிவது இல்லை என்பதும் அதிகாரிகளுக்கு தெரியும். அத்தகைய இணைப்புகளுக்கு கட்டணம் வராவிட்டாலும், டெபாசிட் தொகை செலுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியால் மின் இணைப்புகள் பெறப்பட்ட இடங்களில் கள ஆய்வு செய்து, பயன்படுத்தப்படாத இணைப்புகளை கண்டறிந்து நிரந்தரமாக ரத்து செய்யவும், தேவைக்கு ஏற்ப மட்டும் மின்சாரத்தை பயன்படுத்தி, செலவை குறைக்கவும் மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அதன் பயன்பாட்டை அதிகரிப்பது, மாநகராட்சியின் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர். மின் உற்பத்தி கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்களை நியமித்து, இரண்டு மாதங்கள் கள ஆய்வு செய்து, சிக்கன திட்டத்தை இறுதிப்படுத்த முடிவு செய்துள்ளனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ''மாநகராட்சி பள்ளிகளில் சோலார் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நிறுவப்பட்ட சில இடங்களில் கோளாறு காரணமாக பயனற்று இருப்பதாக தெரிய வந்தது. ''அவை துரிதமாக சரி செய்யப்படும். தேவைக்கு மேல் பெறப்பட்ட இணைப்புகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுப்போம். ஆண்டுக்கு ரூ.4 கோடி வரை செலவை குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார்.
05-Oct-2025