மாநகராட்சி அலுவலகம் முற்றுகை; துாய்மை பணியாளர்கள் கைது
கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சட்டப்படியான போனஸ் வழங்க வேண்டும்; கலெக்டர் நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டுமென, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை கமிஷனர் சிவக்குமார், பேச்சு நடத்தியும் அவர்கள் உடன்படவில்லை.நேற்று காலை, 8:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகம் முன் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மீண்டும் கூடினர். நுழைவாயில் மூடப்பட்டு இருந்ததால், நடைபாதையில் வரிசையாக அமர்ந்தனர். பதட்டமான சூழல் ஏற்பட்டதால், போலீசார் வரவழைக்கப்பட்டு, 90 பெண்கள் உட்பட, 151 பணியாளர்கள் கைது செய்யப்பட்டு, நல்லாயன் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர். மாநகராட்சி அலுவலகத்துக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.