உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள்ளநோட்டுகள் புழக்கம் கோவையில் 6 பேர் கைது

கள்ளநோட்டுகள் புழக்கம் கோவையில் 6 பேர் கைது

கோவை: கோவையில் 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து, கள்ளநோட்டுகளாக புழக்கத்தில் விட முயன்ற, 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.86 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை உக்கடத்தில் இருந்து பேரூர் செல்லும் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை வந்த இளைஞர்கள் சிலர், 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மதுபாட்டில்கள் வாங்கினர். அவர்கள் கொடுத்த நோட்டுகள் மீது சந்தேகமடைந்த ஊழியர்கள், அவற்றை சோதனை செய்தனர். கள்ளநோட்டுக்கள் என தெரிந்ததால், உடனடியாக கடைவீதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார் செல்வபுரம் ஹயாஸ் என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அசல் நோட்டுக்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக, கரும்புக்கடை அக்தர் பர்வேஷ், 21, ஆபில், 20, செல்வபுரம் ஹயாஸ், 19, உக்கடம் ஷாகித்,19, முகமது இர்பான், 18, முகேஷ் குமார், 20 ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இதில், ஆபில், ஷாகித், முகமது இர்பான் ஆகியோர் கல்லுாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இருந்து, 372 ஐந்நுாறு ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கூறுகையில், ‘‘மதுரையில் இருந்து கள்ளநோட்டை பெற்று கோவையில் புழக்கத்தில் விட்ட ஆறு பேரை கைது செய்துள்ளோம். ஒவ்வொருவரிடமும் இருந்த ரூபாய் நோட்டுகளில் வெவ்வேறு வரிசை எண்கள் இருந்தன. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு, எப்போது இருந்து இதை செய்து வருகின்றனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி