உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசை கிறுகிறுக்க வைத்த தம்பதி தகராறு

போலீசை கிறுகிறுக்க வைத்த தம்பதி தகராறு

கோவை: கோவையில், மாணவி பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்த பரபரப்பு ஓய்வதற்குள், காரில் பெண் கடத்தப்பட்டதாக தகவல் பரவ, போலீசார் கிறுகிறுத்தனர். விசாரணையில், அது தம்பதியிடையே நடந்த குடும்ப தகராறு என தெரிந்ததும் நிம்மதியடைந்தனர். கோவை, இருகூர் பகுதியிலுள்ள எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் பணியாற்றும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து நடந்து வந்தபோது, அங்குள்ள பவர்ஹவுஸ் அருகே காலியிடத்தில் வெள்ளை நிற காரில், பெண் கூச்சலிடும் சத்தம் கேட்டுள்ளது. உடன், பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, அவர் தகவல் தெரிவித்தார். இந்த சிசிடிவி காட்சிகள் பரவின. உடனே, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பா.ஜ., தலைவர் நாகேந்திரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., தலைவர் தினகரன் உள்ளிட்டோர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என, தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கு நெருக்கடி ஏற்பட, சிங்காநல்லுார் போலீசார் 'சிசிடிவி' காட்சிகளை பார்வையிட்டு, காரில் பயணித்தவர்களை நேற்று மாலை கண்டுபிடித்தனர். விசாரணையில், காரில் இருந்தது இருகூரை சேர்ந்த தம்பதி என்றும், பொருட்கள் வாங்குவது தொடர்பாக, காரில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறை பார்த்து, கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தகவல் அளித்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், ஒரு பெண் பேசியதாக வீடியோ, அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'கணவன் - மனைவிக்கு காரில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூச்சலிட்டதை பார்த்ததும், பெண்ணை கடத்துவதாக தகவல் பரவி விட்டது. ' இச்சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க, போலீசார் இரவு, பகல் பார்க்காமல் தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் தொடர்புடைய குடும்பத்தினர் நலன் கருதி, அவர்கள் பற்றிய விபரம் அளிக்கப்படவில்லை' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sangi Mangi
நவ 08, 2025 19:25

இந்த சிசிடிவி காட்சிகள் உண்மையா பொய்யா என்று ஆராயாமல் அறிவு ஜீவிகள் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பா.ஜ., தலைவர் நாகேந்திரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, அ.ம.மு.க., தலைவர் தினகரன் உள்ளிட்டோர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என, தி.மு.க., அரசுக்கு எதிராக வதந்தியை பரப்பி வன்மத்தை கக்குகிறார்கள் ....


Venugopal S
நவ 08, 2025 11:19

எல்லோரும் வதந்திகள் பரப்புவதில் மன்னர்கள்!


ராமகிருஷ்ணன்
நவ 08, 2025 09:53

எத்தனையோ புளுகுகளில் இதுவும் ஒன்று. நம்ப முடியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை