கோடநாடு வழக்கில் கோவில் பூசாரி உட்பட 2 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன்
கோவை : கோடநாடு வழக்கில் எஸ்டேட் கோவில் பூசாரி உட்பட, 2 பேர் அக்., 3ம் தேதி ஆஜராக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த, கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில், 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. போலீசார் இதில் தொடர்புடையதாக கருதப்படும் சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியானார். தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கை மறுவிசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக, 500க்கு மேற்பட்டவர்களிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவலின் படி, பலருக்கு சம்மன் அனுப்பி சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கோவில் பூசாரியாக இருந்த கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் மற்றும் புதுச்சேரி தனியார் வங்கி மேலாளர் ஆகிய இருவருக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வருகிற, 3-ம் தேதி, கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேரில் ஆஜராக, சம்மன் அனுப்பி உள்ளனர்.விக்னேஷ் சிறு வயது முதல், கோடநாடு எஸ்டேட்டில் உள்ள கோவில் பூசாரியாக இருப்பதால் அவருக்கு சில விவரங்கள் தெரிந்திருக்கலாம் என்பதாலும், வங்கி பண பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் பெற வேண்டி இருப்பதால் வங்கி மேலாளருக்கும், சம்மன் அனுப்பியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் தெரிவித்தனர்.