உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்

வாலிபருக்கு கத்திக்குத்து; 5 பேர் கைது ஒண்டிபுதுார் : காமாட்சிபுரம் நொய்யல் வீதி ராகுல்,19; ஒரு பெயின்டர். இவருக்கும் நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர்.நகர் அபிலேஷூக்கும், 19 சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் ராகுல் நெசவாளர் காலனி அருகே பைக்கில் நண்பர் ரவீன் உடன் சென்றார். அங்கிருந்த அபிலேஷ், நண்பர்கள் ராகுலை வழிமறித்தனர். பைக்கை தள்ளிவிட்டு கத்தியால் குத்தினர். சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து அபிலேஷ், 19, அவரது நண்பர்கள் பாரத், 20, குருதீப், 23, திலீப்குமார், 19, சங்கரராமன், 20 ஆகியோரை சிறையில் அடைத்தனர். மகள் வைத்த விஷத்தை குடித்த தாய் பலி வடவள்ளி : பத்மா நகர் கீதா, 33 குடும்ப பிரச்னைக்காக அரளி விதையை அரைத்து சாப்பிட்டார். பாதி சாப்பிடும் போது வாந்தி வந்ததால், மீதியை வைத்து சென்றார். ஏற்கனவே விரக்தியில் இருந்த கீதாவின் தாயார் லட்சுமி, 65, மீதமிருந்த அரளி விதையை சாப்பிட்டார். அவர் மயக்கமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கீதா புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் ஒருவர் பலி கல்வீரம்பாளையம் : விநாயகர் கோயில் வீதி முருகேசன், பொம்மணம்பாளையம் – வேடபட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற 4 பேருக்கு சிறை சுந்தராபுரம் : ஆடிட்டர் வீதியில் உள்ள வீட்டில், கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சோதனை நடத்தினர். அங்கிருந்து சஞ்சய்குமார், 26 விற்பனைக்காக 2.350 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். * குனியமுத்துார் போலீசார் மனோஜ்குமார், 24, போத்தனுார் போலீசார் பூபதி, 23, கவுண்டம்பாளையம் போலீசார் வசந்தகுமார், 24 ஆகியோரை விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததற்காக சிறையில் அடைத்தனர். மது குடித்தவர்கள் கைது கோவை: பொது இடங்களில் மது குடிப்பவர்கள் குறித்து நேற்று மாநகர எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், 27 வழக்குகள் பதியப்பட்டன. 34 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீடு விற்பதாக ரூ.26 லட்சம் மோசடி துடியலுார்: என்.ஜி.ஜி.ஓ. காலனி ஆறுமுக கவுண்டர் வீதி பவித்ரா, 37 சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். உறவினர் சுவர்ணலதா, மகன் கார்த்திகேயன் தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக்கடன் பெற்றிருந்தனர். அதை அடைக்க வீட்டை பவித்ராவுக்கு விற்பதாக தெரிவித்து ஒப்பந்தம் செய்தனர். பவித்ராவிடம் இருந்து ரூ.21 லட்சம் டி.டி., மற்றும் ரூ.5 லட்சம் பெற்றனர். பணத்தை பெற்றுக் கொண்டு வீட்டுக்கடனை முழுமையாக அடைத்த பின் அசல் பத்திரத்தை பெற்றனர். பவித்ராவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி சுவர்ணலதா, வீட்டை கார்த்திகேயன் பெயருக்கு தானமாக எழுதிக் கொடுத்தார். புகாரின் பேரில் துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை