கிரைம் கார்னர்: கோயம்புத்தூர்
மொபட் திருடியவருக்கு சிறை கோவில்மேடு : கே.கே.புதுார் ரோடு மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்தவர் நிவேதா, 26. இவர் 14ம் தேதி இரவு வீட்டின் முன் தனது மொபட்டை நிறுத்தி விட்டு துாங்கச் சென்றார். மறுநாள் காலை மொபட்டை காணவில்லை. புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் விசாரித்தனர். அதில் சாய்பாபா காலனியை சேர்ந்த அஸ்வின், மொபட்டை திருடியது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். புகையிலைப் பொருட்கள் விற்ற இருவர் கைது கணபதி : சங்கனுார் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலைப் பொருட்கள் விற்பதாக தகவல் பெற்ற சரவணம்பட்டி போலீசார், நடத்திய சோதனையில் 9.627 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலை விற்ற கணபதியில் தங்கியுள்ள சிவகங்கை தேவகோட்டை சபரிநாதனை, 20 கைது செய்தனர். * புகையிலை விற்ற புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் காளிதாசை, 21 சுந்தராபுரம் போலீசாரும், புதுக்கோட்டை ஆதம்பூரை சேர்ந்த கணேசனை, 28 சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்றவர்கள் கைது போத்தனுார் : போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ரயில்வே பாலம் கீழ் பகுதியில், இருவர் நின்றிருந்தனர். சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருந்தது. அவர்கள் காரமடை சுபாஷ், 28, திண்டுக்கல் எல்லை பாறைப்பட்டி விஜய், 30 என தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. * சுந்தராபுரம் போலீசார் கஞ்சா விற்ற விருதுநகர் ஆலம்பட்டி கருப்புசாமி, 26, திருப்பூர் திருநீலகண்டபுரம் வெங்கடேசனை, 31 கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 கிலோ கஞ்சா, ரூ.30 ஆயிரம், எடை மெஷின் 1, காலி பிளாஸ்டிக் கவர்கள், 20 பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடங்களில் மது குடித்த 17 பேர் கைது கோவை : பொது இடங்களில் மது குடித்ததாக நேற்று மாநகர எல்லைக்குட்பட்ட, 8 போலீஸ் ஸ்டேஷன்களில் பதியப்பட்ட 14 வழக்குகளில், 17 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். * மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் இடையர்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட வேலாண்டிபாளையம் கோவில்மேடு ரஞ்சித்குமாரை, 37 கைது செய்தனர். 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.