கிரைம் கார்னர்: கோவை மாவட்டம்
கஞ்சா விற்ற இருவர் கைது கரும்புக்கடை: ஆசாத் நகர் மைதானத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா விற்ற சாரமேடு முஜிப் ரகுமான்,29, ஆசாத் நகர் முகமது ஷபான்,23, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ஒன்றே கால் கிலோ கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய அண்ணா காலனி முகமது ஆஷிபை தேடி வருகின்றனர். வீட்டில் கொள்ளை முயற்சி சூலுார்: சிந்தாமணி புதுாரை சேர்ந்தவர் டாக்டர் திருமாவளவன். இவரது சகோதரர் அமெரிக்காவில் உள்ளார். நீலிகோணம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டை திருமாவளவன் பராமரித்து வருகிறார். இந்த வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து திருட முயற்சித்தனர். இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், திருமாவளவனுக்கு தகவல் அளித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, மர்ம நபர் இரும்பு கம்பியால் பூட்டை உடைத்து கொண்டிருந்தார். அவர் கூச்சலிட்டதும் அந்நபர் தப்பினார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். கல்லுாரி மாணவி மாயம் சரவணம்பட்டி: மேட்டுப்பாளையம் ஊமைபாளையத்தை சேர்ந்தவர் 21 வயது மாணவி. தனியார் கல்லுாரி விடுதியில் தங்கி படித்த அவர், தனது உறவினர் இறந்து விட்டதாக கூறி விடுப்பு கேட்டு விடுதியில் இருந்து புறப்பட்டார். ஆனால் அவர் ஊருக்கு செல்லவில்லை. விடுதிக்கும் திரும்பவில்லை. தந்தை அளித்த புகாரில் சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பெயின்டருக்கு அடி சுந்தராபுரம்: சத்யமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார், 31; பெயின்டர். இரு தினங்களுக்கு முன் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த இருவர், வாக்குவாதம் செய்தனர். ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கினார். இருவரும் அங்கிருந்து தப்பினர். காயமடைந்த பிரேம்குமார், அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். சுந்தராபுரம் போலீசார் விசாரணையில் சுகுணாபுரம், செந்தமிழ் நகர் ஜான்சா, 30, பிள்ளையார்புரம் சூர்யா ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. ஜான்சா கைது செய்யப்பட்டார். சூர்யாவை தேடுகின்றனர். கஞ்சா, மாத்திரைகள் பறிமுதல் கரும்புக்கடை: கரும்புக்கடை போலீசார் நேற்று முன்தினம் கரும்புக்கடை, ஆசாத் நகரில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த மூவரிடம் விசாரிக்க முயன்றனர். ஒருவர் தப்பினார். இருவரிடம் நடத்திய விசாரணையில், சாரமேடு, திப்பு நகர் முஜீப் ரஹ்மான், 29 கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்த முஹமது ஷப்வான், 23 தப்பியது கரும்புக்கடை, அண்ணா காலனியை சேர்ந்த முஹமது ஆசிப் எனத் தெரிந்தது. அவர்கள் விற்பனைக்காக, 1.25 கி.கிராம் கஞ்சா, 2.7 மி.கிராம் மெத்தாம்பெட்டமைன், போதைக்கு பயன்படுத்தும் டெபண்டடால் மாத்திரைகள், 86 வைத்திருந்தனர். போலீசார், முஜிப்ரஹ்மான், முகமது ஷ்வான் ஆகியோரை கைது செய்தனர். முஹமது ஆசிப்பை தேடுகின்றனர்.