கிரைம் செய்திகள்
வேனுடன் ரேஷன் அரிசி பறிமுதல்
அன்னுார் பகுதியில் சிலர் ரேஷன் அரிசியை வாங்கி வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ., செல்வம் தலைமையில் போலீசார் நேற்று குமாரபாளையம் அருகே 1,250 கிலோ ரேஷன் அரிசி உடன் வேனில் வந்த நபரை பிடித்தனர்.விசாரணையில் அவர் சென்னையைச் சேர்ந்த ராஜ்கமல், 27. என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.இத்துடன் பொன்னே கவுண்டன் புதூர் அருகே உள்ள யாசின் பிளவர் மில்லில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல டன் பச்சரிசி, குருணை அரிசி மற்றும் அரைக்கப்பட்ட அரிசி மாவு மூட்டைகள் பிடிபட்டன. இவை ரேஷன் அரிசியாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் சிவில் சப்ளை துறைக்கு தகவல் தெரிவித்தனர்.பிடிபட்டது ரேஷன் அரிசியா என போலீசாரும், உணவு வழங்கல் துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். -- ரவுடி கொலை; ஆறு பேர் கைது
சூலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக், 33. திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட, 16 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளார்., தற்போது, மனைவியுடன் மேட்டுப்பாளையம் நடூரில் வசித்து வந்தார். கடந்த, 17 ம்தேதி சூலூர் வந்துள்ளார்.சந்தைப்பேட்டையில் உள்ள சர்ச் அருகே உட்கார்ந்திருந்த போது, கவுதம் பிரகாஷ்,19, தமிழ் இனியன், 19, சதீஷ்குமார், 19, வெங்கடேஷன்,25, சங்கர், 20, தாஜூதீன்,18 ஆகியோர் வந்துள்ளனர்.மேற்கண்ட ஆறு பேரும் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களை கார்த்திக் அடிக்கடி மிரட்டி அடித்து, பணம் பறித்ததால் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், அவர்களை, கார்த்திக் மிரட்டி உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆறு பேரும் சேர்ந்து கார்த்திக்கை தாக்கி கத்தியால் குத்தி தப்பினர். அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். ---லாரி மோதி இரு தொழிலாளர்கள் பலி
சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் வேலன், 60, மற்றும் இருகூரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி,50. இருவரும், பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர்.நேற்று முன்தினம் மாலை, அருகில் உள்ள கிளை நிறுவனத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அங்குள்ள ரெஸ்டாரண்ட் அருகில் திரும்பும் போது, பின்னால் வந்த லாரி மோதியது.இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் வேலன் பலியானார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்தார்.பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைதுகோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, 56. இவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேட்டுப்பாளையம் சி.டி.சி., டிப்போ அருகே உள்ள அரசு ஆண்கள் பள்ளி அருகே இவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து, மேட்டுப்பாளையம் போலீசார் அப்பகுதிக்கு சென்று வெள்ளியங்கிரியிடம் விசாரணை நடத்தியதில், அவர் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.