உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

அழகு நிலையத்தில் திருட்டு

கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் பகுதியில் அழகு நிலையம் ஒன்று உள்ளது. இங்கு பணியாற்றி வந்த சங்கீதா, கடந்த, 15ம் தேதி இரவு அழகு நிலையத்தை மூடிவிட்டு, அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது, திறந்து கிடந்தது. அழகு நிலையத்துக்குள் வைக்கப்பட்டிருந்த, 5,300 ரூபாய் ரொக்கம், டேப், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தன. சம்பவம் குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

22 பவுன் நகை திருட்டு

இடிகரை ராமச்சந்திரா அவன்யூ குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் ரமேஷ்குமார்,40; தனியார் நிறுவன மேலாளர். இவர் பொங்கல் விழாவை ஒட்டி சொந்த ஊரான திருச்செந்தூர் பரமன் குறிச்சிக்கு குடும்பத்தோடு சென்று விட்டு, வீடு திரும்பினார். வீட்டில் முன்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் பீரோவில் இருந்த, 5 பவுன் ஆரம், 2 பவுன் டாலர் செயின் உள்ளிட்ட 22 பவுன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், மொபைல் போன் ஆகியவை திருட்டு போயிருந்தது. சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பைக் விபத்தில் ஓருவர் பலி

அன்னூர் அருகே ஆயிமாபுதூரைச் சேர்ந்தவர் ஓதிச்சாமி, 65. அரசு போக்குவரத்து கழக பணி நிறைவு பெற்ற டிரைவர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, அன்னூரில், மேட்டுப்பாளையம் சாலையில், ஆயிமாதூர் பிரிவில் மோட்டார் பைக்கில் சென்றபோது, மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் நோக்கி வந்த பைக் மோதியது.மோதிய வேகத்தில் ஓதிச்சாமியின் பைக் புளிய மரத்தில் மோதி விழுந்தது. படுகாயம் அடைந்த ஓதிச்சாமி அன்னூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுநர் சிறுமுகை சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளி ஜெகநாதன், 21. படுகாயத்துடன் மேட்டுப்பாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை