உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பரிவாஹன் செயலி போல் லிங்க் அனுப்பி போக்குவரத்து விதிமீறியதாக புதுவித மோசடி பொதுமக்களை உஷார்படுத்தும் சைபர் கிரைம் போலீஸ்

பரிவாஹன் செயலி போல் லிங்க் அனுப்பி போக்குவரத்து விதிமீறியதாக புதுவித மோசடி பொதுமக்களை உஷார்படுத்தும் சைபர் கிரைம் போலீஸ்

கோவை,:போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும், 'சலான்' போல், போலி செயலி வாயிலாக சலான் அல்லது 'லிங்க்' அனுப்பி, புதுவிதமாக மோசடி செய்யப்படுகிறது. இந்த வகையில் வங்கி கணக்கில் இருந்த பணத்தை இழந்தவர்கள், 'சைபர் கிரைம்' போலீசாரின் உதவியை நாடியுள்ளனர்.இன்றைய டிஜிட்டல் உலகில், சைபர் குற்றங்களும், மோசடிகளும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் டிரேடிங், பகுதி நேர வேலை, டிஜிட்டல் அரஸ்ட் என, பல வகைகளில் மோசடிகள் நடக்கின்றன.வழக்கமாக நடக்கும் மோசடிகளை அறிந்து பொதுமக்கள் உஷாராகி வருவதால், தற்போது புதுவித மோசடி உருவாகி வருகிறது. அதில், ஒன்றாக உருவெடுத்துள்ளது தான், பரிவாஹன் செயலி மோசடி. இதில், விதிமீறல் வாகன ஓட்டிகளின் மொபைல் போன் எண்ணுக்கு 'வாட்ஸாப்'பில் குறுஞ்செய்தி அனுப்பி, அவர்கள் வங்கி கணக்கில் உள்ள தொகையை சுருட்டி விடுகின்றனர்.

குறுஞ்செய்தி

போக்குவரத்து போலீஸ் சார்பில், போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், சாலை விதிகளை மீறும் வாகனங்களை கண்டறிந்து, ஆன்லைனில் போலீசார் அபராதம் விதித்து, வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு 'இ-சலான்' அனுப்புகின்றனர். அபராதத்தை செலுத்த, 'பரிவாஹன்' என்ற செயலியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அச்செயலியை பதிவிறக்கம் செய்து வாகனத்தின் விபரங்களை பதிவு செய்தால், விதிமீறல் குறித்த படத்துடன், எங்கு நடந்தது, எப்போது நடந்தது, எவ்வளவு அபராதம் உள்ளிட்ட விபரங்கள் வரும்.இந்நடைமுறையை பின்பற்றி, போலீசார் அனுப்புவதை போலவே, போக்குவரத்து விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். இவர்கள் 'வாட்ஸாப்'பில் மட்டுமே அனுப்புகின்றனர். விதிமீறிலில் ஈடுபட்டதுபோல், வாகனத்தின் போட்டோ, இடம், நேரம், அபராத தொகை என, அனைத்து விபரங்களுடன் குறுஞ்செய்தி வருகிறது. அபராதம் செலுத்துவதற்கான செயலி எனக்கூறி, போலி செயலிக்கான 'லிங்க்'கையும் 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்புகின்றனர்.அதைப்பார்த்து உண்மை என நம்பி, அபராதம் செலுத்த வாகன ஓட்டிகள் முயற்சிக்கும் போது, வங்கி கணக்கில் உள்ள பணத்தை சுருட்டி விடுகின்றனர்.

தரவுகள்

அவர்கள் அனுப்பிய லிங்க்கில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து, அபராதம் செலுத்துவதற்காக, வங்கி விபரங்களை பதிவு செய்தால், வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் மோசடி நபர்கள் எடுத்து விடுகின்றனர்.இதுதொடர்பான புகார்கள், கோவை சைபர் கிரைம் போலீசுக்கு வந்துள்ளன.-சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:வாட்ஸாப்'பில் வரும் லிங்க்குகளை தொடக்கூடாது. தெரியாத நபர்கள் அனுப்பும் செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. போலீசார் அபராதம் விதித்திருப்பது போல், தங்கள் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தால், 'பிளே ஸ்டோரில்' உள்ள அரசின் பரிவாஹன் செயலியை பயன்படுத்தி மட்டுமே அபராதம் செலுத்த வேண்டும். போலி செயலிகளை பதிவிறக்கம் செய்தால், தனிப்பட்ட தரவுகள், பணம் திருடு போக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி