உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரால் பாதிப்பு

தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் மழைநீரால் பாதிப்பு

கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கமடைவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக, பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அனைத்தும் வேகமாகவே செல்கின்றன. இதில், மழை காலங்களில் கிணத்துக்கடவு முதல் ஆச்சிபட்டி வரை ஆங்காங்கே ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், மழைநீர் தேங்கி இருப்பது தெரியாமல் வாகனத்தை இயக்குவதால் தடுமாறுகின்றனர். சில நேரங்களில் சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், கார் போன்ற வாகனங்கள் செல்லும்போது ரோட்டில் இருக்கும் மழை நீர், பைக்கில் செல்பவர்கள் மீது தெறிப்பதல், பைக் ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர். இதேபோன்று, கிணத்துக்கடவு மற்றும் கோவில்பாளையம் பகுதியில் வாகனங்கள் திரும்பும் 'யூடேர்ன்' பகுதி மற்றும் ரோட்டோரம் மழைநீர் தேங்கி சகதியாக உள்ளது. இதில், கனரக வாகனங்கள் திரும்பும் போதும் பைக் ஓட்டுநர்கள் மீது சேற்றுடன் தண்ணீர் தெறிக்கிறது. ரோட்டின் இரு புறங்களிலும் மழை நீர் செல்ல வடிகால் வசதிகள் இருந்தும் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்களும், வாகன ஓட்டுநர்களும் நெடுஞ்சாலைத்துறையினருக்கு பல முறை புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். ஆனால், இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், அவர்கள் அதிகாரிகள் மீது அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் ரோட்டில் மழை நீர் தேங்கும் பகுதியை கண்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, வாகன ஓட்டுநர்களின் பிரச்னை தீர்க்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி