நாட்டிய பயிற்சி: மாணவியர் ஆர்வம்
உடுமலை: சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவியருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில், பரதநாட்டிய பயிற்சி வழங்கப்படுகிறது. உடுமலை ஒன்றியம், சின்னவீரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நுாற்றாண்டை தொட்ட பள்ளியாகும். தேவையான கட்டமைப்பு வசதி, மாணவ, மாணவியருக்கு பல்வேறு சிறப்பு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட காரணங்களால், இப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை, 700 ஆக உள்ளது. தற்போது இப்பள்ளியில், பள்ளி ஆண்டு விழாவையொட்டி, மாணவியருக்கு பரதநாட்டிய பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவியர் ஆர்வத்துடன் பயிற்சியில் பங்கேற்பதுடன், பயிற்சியை தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர். விழாவுக்கு பிறகும், மாணவியர் விருப்பத்தின் அடிப்படையில் இப்பயிற்சிகள் தொடரும் என பள்ளி தலைமையாசிரியர் இன்பக்கனி தெரிவித்தார்.