உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அசுர வேக டிப்பர் லாரிகளால் ஆபத்து

அசுர வேக டிப்பர் லாரிகளால் ஆபத்து

போத்தனூர்; கோவை, மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி, தற்போது நடந்து வருகிறது. இதற்காக வழுக்குப்பாறை, காரச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, கிராவல் மண் டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.இவை, மதுக்கரை -- நீலம்பூர் பை-பாஸ் சாலை வழியாக, மதுக்கரை மார்க்கெட் சாலையை வந்தடைகின்றன. அங்கிருந்து இடதுபுறம் திரும்பி, மரப்பாலத்தை கடந்து பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை வழியே, பணி நடக்குமிடத்திற்கு செல்கின்றன.இந்த டிப்பர் லாரி டிரைவர்களுக்கு, டிரிப் அடிப்படையில் பேட்டா தருவதாக கூறப்படுகிறது. இதனால் வாகனத்தை அதிவேகமாக இயக்குகின்றனர். குறிப்பாக, திருப்பங்களில் வாகனத்தை நிறுத்தி இயக்குவதில்லை. வரும் வேகத்திலேயே திருப்புகின்றனர். அவ்வாறு திரும்புகையில், பின்புற கதவு திறந்து மண் சாலையில் கொட்டுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இருபுறமும் உள்ள, சேப்டி லாக்கரை போடாததே. இத்தகைய ஒரு சம்பவம், மிளகாய்பாறை தோட்ட மேடு வளைவில் நடந்தது. அவ்வழியே வந்த ஒரு டிப்பர் லாரியின் கதவு திறந்து, மண் சாலையில் கொட்டியது. அதிர்ஷ்டவசமாக பின்னால் பைக்கில் வந்த இருவர், வாகனத்தை நிறுத்தியதால் தப்பினர்.

அமைச்சர் பெயரால் அட்டூழியம்

பொதுமக்கள் கூறுகையில், 'டிப்பர் லாரியில் அதிக பாரம் ஏற்றி, அதிவேகத்தில் வருகின்றனர். ஏதாவது கேட்டால், கரூரை சேர்ந்த அமைச்சரின் பெயரை கூறுகின்றனர். இவர்கள் இவ்வழித்தடத்தில் வருவதற்கு பதிலாக, பை பாஸ் சாலையிலேயே சென்று, மரப்பாலம் வழியாக பாலக்காடு சாலையை அடையலாம். இப்பிரச்னை ஏற்படாது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை