கட்டுமான பணியில் குறைபாடு; முன்பணம் திருப்பி தர உத்தரவு
கோவை; கோவை வடவள்ளி, ராமசாமி நகரை சேர்ந்த அர்ச்சனா என்பவர், சொந்த வீடு கட்டுவதற்காக 'பார்ட்டிஸ் கன்ஸ்ட்ரக்சன்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்தை அணுகினார். கட்டுமான பணிகள் முடிக்க மொத்தம், 41.91 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதற்காக, நான்கு லட்சம் ரூபாய் முன்தொகை செலுத்தினார். கட்டட பவுண்டேசனுக்கு ஒப்பந்தப்படி, 17 துாண்கள் அமைக்க வேண்டும்.ஆனால், 15 துாண்கள் மட்டுமே கட்டுமான நிறுவனத்தினர் அமைத்ததால் பிரச்னை ஏற்பட்டது. பணியில் திருப்தி இல்லாததால், மேற்கொண்டு வேலை செய்யாமல், ஒப்பந்தத்தை முடித்து கொள்ள அர்ச்சனா முடிவு செய்தார். முன்பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது கட்டுமான நிறுவனத்தினர் மறுத்தனர்.இதனால் இழப்பீடு வழங்க கோரி, கட்டுமான நிறுவனம் மீது, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ' கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் பெற்ற தொகை , நான்கு லட்சம் ரூநபாயை திருப்பி வழங்க வேண்டும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.