உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரசவ சிகிச்சையில் குறைபாடு; 4.80 லட்சம் ரூபாய் இழப்பீடு

பிரசவ சிகிச்சையில் குறைபாடு; 4.80 லட்சம் ரூபாய் இழப்பீடு

கோவை; பிரசவ சிகிச்சையின் போது ஏற்பட்டதாக கூறப்படும் குறைபாடு காரணமாக, பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், 4.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. சிங்காநல்லுார், என்.கே.பாளையத்தை சேர்ந்தவர் மீனா; கர்ப்பிணியான இவர், பீளமேட்டிலுள்ள கிருத்திகா மெடிக்கல் சென்டர் என்ற கிளீனிக்கில், மருத்துவ பரிசோதனை செய்து வந்தார். கிளீனிக் மருத்துவர் அறிவுரைப்படி, டாடாபாத்திலுள்ள ஷீலா மருத்துவமனையில், பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை வாயிலாக குழந்தை பிறந்தது. பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவிநாசி ரோட்டிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக, 3.25 லட்சம் ரூபாய் செலவானது. முந்தைய மருத்துவமனையில், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவ செலவு தொகை மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் மருத்துவ சிகிச்சை அளித்த போது சேவை குறைபாடு செய்துள்ளதால், சிகிச்சைக்கான தொகை, 3.25 லட்சம், ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 1.50 லட்சம் ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என மொத்தம், 4.80 லட்சம் ரூபாய், மனுதாரருக்கு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை