விளையாட்டு வீரர்கள் வாழ்வில் விளையாட்டு அணி தேர்வில் தாமதம்; பாரதியார் பல்கலையில் குழப்பம்
கோவை; தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே நடக்கும் வாலிபால் போட்டியில் பங்கேற்கும் பாரதியார் பல்கலை அணி, இதுவரை தேர்வு செய்யப்படாதது வீரர்களிடையே குழப்பத்தையும், ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பாரதியார் பல்கலையின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில், 120க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு சேர்க்கையின் கீழ், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.பல்கலை, கல்லுாரிகளுக்கு இடையே கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகளை பல்கலை உடற்கல்வி துறை நடத்துகிறது. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலையில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே, ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும், 18 முதல், 22ம் தேதி வரை நடக்கிறது.இதில், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மாநிலங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பல்கலைகள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் மட்டும், 50க்கும் மேற்பட்ட பல்கலைகளின் பதிவாளர்களுக்கு, போட்டி குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.போட்டிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள். ஆனால், பாரதியார் பல்கலை அணிக்கு, 14 பேர் அடங்கிய வீரர்களை தேர்வு செய்வதற்கு, கல்லுாரிகளுக்கு இடையே போட்டிகள் இதுவரை நடத்தப்படவில்லை. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்கலை அணியில் விளையாடுவோமா என்ற சந்தேகம், வீரர்களிடம் எழுந்துள்ளது. வீரர்களுக்கு பாதிப்பு!
கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் கூறியதாவது:கல்லுாரிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தி, வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது முகாமில் அவர்கள் பயிற்சி பெற்று வந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் அணியே தேர்வு செய்யவில்லை. ஏழை, எளிய மாணவர்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பயின்று வருகின்றனர்.இவர்கள் தேசிய, பல்கலை அளவில் விளையாடும் போட்டிகளில் வெற்றிபெறும் பட்சத்தில் அரசு வேலை, உயர்கல்வி உள்ளிட்டற்றில் வாய்ப்புகள் கிடைக்கும். பல்கலை நிர்வாகம் உடனடியாக, வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். விரைவில் தேர்வு
பல்கலை உடற்கல்வி துறையினர் கூறுகையில், 'போட்டியில் பங்கேற்க கேரள பல்கலையில் பதிவு செய்து விட்டோம். கடந்தாண்டு கல்லுாரிகளுக்கு இடையே நடந்த வாலிபால் போட்டியில், சில கல்லுாரிகள் வீரர்களை விதிமீறி விளையாட வைத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 'கமிட்டி', இதுவரை அறிக்கை தரவில்லை. இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி வரும், 18ம் தேதிக்குள் மண்டல அளவிலான போட்டிகளை நடத்தி, வீரர்கள் தேர்வு செய்து அனுப்பிவைக்கப்படுவர்' என்றனர்.
'விசாரித்து நடவடிக்கை'
பாரதியார் பல்கலை பதிவாளர்(பொ) ரூபாவிடம் கேட்டபோது, ''இதுவரை, 18 வகையான போட்டிகள், கல்லுாரிகளுக்கு இடையே நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாலிபால் போட்டி குறித்து, துறை சார்ந்தவர்களிடம் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.