பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி; டில்லி ஆசாமிக்கு ஆறு ஆண்டு சிறை
கோவை; பெண் இன்ஜினியரிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், டில்லி ஆசாமிக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை மாவட்டம், சூலுாரை சேர்ந்த பெண் இன்ஜினியர் மொபைல் போனிற்கு, 2024, நவ.,18 அன்று தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறிய நபர், அந்த பெண் பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதற்குள் போதைப்பொருள் இருப்பதாகவும் தெரிவித்தார்.மும்பை சைபர் கிரைம் போலீசாரிடம், புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டார். பண பரிமாற்றத்தை சரி பார்க்க இருப்பதால், 10 லட்சம் ரூபாய் பணம் அனுப்புமாறு கூறி, வங்கி கணக்கு எண் ஒன்றை கொடுத்தார்.பயந்த அந்த பெண், மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அவர் கேட்ட பணத்தை அனுப்பினார். சில நிமிடங்களில் பணம் திரும்பி வந்துவிடும் என்றார். ஆனால், அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை.ஏமாற்றப்பட்ட அந்த பெண், கோவை மாவட்ட சைபர் கிரைமிற்கு புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கையில், நுாதன மோசடியில் ஈடுபட்டது டில்லி, கோவிந்த்புரியை சேர்ந்த கோபிகுமார்,42, என்று தெரிய வந்தது.டில்லி சென்ற தனிப்படையினர், கோபிகுமாரை கைது செய்தனர். டில்லியில், 'காம்பேக்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ' என்ற பெயரில், இரண்டு நிறுவனம் நடத்தி வந்த அந்த நபர், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேலும் பலரிடம், 29.14 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.இவர் மீது, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில், 2025, பிப்., 10ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், கோபிகுமாருக்கு மொத்தம் ஆறு ஆண்டுகள் சிறை, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார். இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 35 நாட்களில் விசாரணை முடித்து, தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.