குப்பை கிடங்கை நிரந்தரமாக மூடி இடத்தை மீட்க வலுக்கும் கோரிக்கை
கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கை நிரந்தரமாக இழுத்து மூட, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையிடப்பட்டுள்ளது.குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம்(கோவை தெற்கு) அளித்துள்ள மனு:கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குப்பை கிடங்கில் செயல்படும் ஆறு தனியார் நிறுவனங்கள், இன்று வரை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி சான்று இல்லாமல் செயல்பட்டு வருவதை, ஆர்.டி.ஐ., வாயிலாக தெரிந்துகொண்டோம்.குப்பை கிடங்கில் தேக்கிவைக்கப்பட்டுள்ள குப்பையை மட்டும் 'பயோ மைனிங்' முறையில் அழித்து நிலத்தை மீட்டெடுத்து, புதிதாக வரும் குப்பையை கொட்டுவதற்கு மாற்றும் இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று, 2018 அக்., 3ம் தேதி, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை மதிக்காமல் தினமும், 1,200 டன் வரையிலான குப்பையை கொட்டி எங்களது பகுதியை, வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாநகராட்சி நிர்வாகம் மாற்றிவிட்டது. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, நீதிமன்ற உத்தரவினை மாநகராட்சி நிர்வாகம் மதித்து செயல்பட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.குப்பை கிடங்கில் செயல்பட்டுவரும் ஆறு தனியார் நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இனி குப்பை கிடங்கில் செயல்படாத வகையில், நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.